சாம்பாருக்குள்ள பிளாஸ்டிக் பாக்கெட் பிரியாணிய திற.. பெருசா ஏதாவது இருக்கும்... விருதுநகர் அய்யனார் ஓட்டலில் அதிரடி..! 6 பேர் வாந்தி எடுத்த புகாரில் நடவடிக்கை
சென்னை தியாகராய நகரில் உள்ள விருதுநகர் அய்யனார் செட்டிநாடு உணவகத்தில் சாப்பிட்ட 6 பேர் வாந்தி ஏற்பட்டதாக அளித்த புகாரின் பேரில் அதிரடியாக ஆய்வு நடத்திய உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டலை இழுத்து மூட உத்தரவிட்டனர்
ஓட்டல் சாம்பாருக்குள் பிளாஸ்டிக் பாக்கெட் கிடப்பதை கண்டு காண்டாகி உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி கடிந்து கொண்ட காட்சிகள் தான் இவை..!
சென்னை தியாகராய நகர் பிஞ்சுளா சுப்பிரமணியன் தெருவில் விருதுநகர் அய்யனார் என்ற பிரபல செட்டிநாடு அசைவ உணவகம் ஒன்று உள்ளது. இங்கு மதியம் 1:30 மணியளவில் ஐடி துறையில் பணிபுரியும் பெண் ஒருவர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் மதிய உணவு அருந்தினர்
சிக்கன் பிரியாணி,சிக்கன் மட்டன் அசைவ சாப்பாடு ஆகியவற்றை ஆர்டர் செய்து உண்டனர் ,இதில் அவர்கள் சாப்பிட்ட பிரியாணி உள்ளிட்டவை கெட்டுபோனதாக குற்றஞ்சாட்டிய ஐடி பெண் ஊழியர் உள்ளிட்ட 6 பேர் வாந்தி மயக்கம் வருவதாக கூறி ஓட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்
ஓட்டல் ஊழியர்களோ உணவின் தரம் சரியாக உள்ளதாகவும், முழுவதையும் சாப்பிட்டுவிட்டு புகார் தெரிவிப்பதாகவும் எதிர்த்து வாக்குவாதம் செய்ததால் சாப்பிட்ட அனைவரும் உணவை அப்படி, அப்படியே.. வைத்து விட்டு எழுந்தனர்
உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் மாலை சரியாக 3 மணிக்கு உணவகத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்கள் அருந்திய உணவு வகைகளை ஆய்வு நடத்தினர்.
தொடர்ச்சியாக உணவு தயாரிக்கும் கூடத்திற்கு நேரில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் குளிர்பதன பெட்டியில் இறைச்சி பாக்கெட்டுகள் கெட்டுப் போய் இருப்பதையும் , அதற்குள் கரப்பான் பூச்சிகள் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
சமையலறையில் சாம்பாருக்குள் பிளாஸ்டிக் பாக்கெட் கிடப்பதை கண்டு உரிமையாளர் மலர்மன்னை பார்த்து ஐயா இதை நீங்க சாப்பீவிடுவீங்களாய்யா என்று காண்பித்து சத்தம் போட்டார்
அங்கு ஈக்கள் மொய்க்க வைக்கப்பட்டிருந்த பரோட்டா மற்றும் உணவு பதார்த்தங்களை ஒரு தட்டி எடுத்து வைத்து உரிமையாளரை சாப்பிட சொல்லியதோடு, உங்களாள சாப்பிட முடியுமா? இப்படி ஈமொய்க்கிற பொருளை சாப்பிட்டால் வாந்தி வராம என்ன செய்யும் என்று ஆவேசமானார்
தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்தை தற்காலிகமாக மூடவும் உரிய விளக்கம் கோரி நோட்டீசும் வழங்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுக்காக உணவகத்தில் இருந்து உணவை எடுத்து சென்றனர்.
உணவே மருந்து என்று வாழும் நாம், கூடுமானவரை நல்ல தரமான உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டுவது நல்லது என்று இந்த ஓட்டல் சமையலறை உணர்த்துவதாக அதிகாரிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
Comments