விவசாயி தொடுத்த வழக்கில் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நீதிபதியின் சரமாரி கேள்விகள்..!
என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்துக்கு கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும், என்.எல்.சி. நிறுவனத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில், தனது நிலத்தை என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தி 16 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதாக கூறியுள்ளார். 5 ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிமையாளர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டுமென நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே தமது நிலத்தை தம்மிடம் மீண்டும் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளார். இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், விவசாயிகள் அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க செப்டம்பர் 15 வரை அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இழப்பீடு வழங்கிவிட்டு இத்தனை ஆண்டுகளாக நிலத்தை ஏன் சுவாதீனம் எடுக்கவில்லை என்று வினாவினார். சுவாதீனம் எடுக்காததால் தான் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர் என்று நீதிபதி தெரிவித்தார். அதற்கு பதிலளித்த என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர், தங்களது நடவடிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் பயிர்கள் சேதமடையவில்லை என்றும் கூறினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, பொக்லைன் மற்றும் புல்டோசர் இயந்திரம் மூலமாக பயிர்களை சேதப்படுத்தி இருப்பதை தான் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளில் பார்த்ததாகவும், எதுவுமே செய்யாவிட்டால் விவசாயிகள் எதற்காக போராட்டம் செய்கிறார்கள் என்றும் கூறினார்.
உடனே என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர், கடந்த டிசம்பர் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயப்பணிகள் முடிந்து பொங்கலுக்குப் பிறகு நிலங்களை ஒப்படைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டதாக கூறினார். ஆனால் அதன்படி நடக்காமல் விவசாயிகள் மீண்டும் பயிர் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது கால்வாய் தோண்டும் பணி நடைபெறாவிட்டால் மழைக்காலங்களில் என்.எல்.சி. சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.
இதையடுத்து, அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைத்து விடுவீர்களா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, கையகப்படுத்திய பின் நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள் என என்.எல்.சி. தரப்பையும் வினவினார். கையகப்படுத்திய நிலத்துக்கு வேலி அமைத்திருக்க வேண்டும் அல்லது ஆட்களை நியமித்து கண்காணித்திருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், என்.எல்.சி. தரப்புக்கும் உத்தரவிட்டார். கால்வாய் தோண்டும் பணியை தொடரலாம் என அனுமதித்த நீதிபதி, அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பதாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கூறி வழக்கை வரும் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்...
Comments