மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் தாமதமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது ஏன்? - காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் தாமதமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது ஏன் என்று காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆடையின்றி இழுத்துச்செல்லப்பட்ட பெண்கள் தங்களின் அடையாளம் வெளியிடப்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
அதனை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. மே 4ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 14 நாட்களாக வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணை குறித்தும், கலவரத்தால் இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கை குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க அவர் உத்தரவிட்டார். முன்னதாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து வன்முறை பற்றி விசாரிக்க கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
Comments