வெளியூர் பெண்களுக்கு கைகொடுக்கும் தோழி

0 2968

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மூலம் வெளியூரில் தங்கி பணிபுரியும் மற்றும் படிக்கும் பெண்களுக்காக சென்னை போன்ற நகரங்களில் தனியார் விடுதிகளுக்கு நிகரான வசதிகளுடன் குறைவான கட்டணத்தில் நடத்தும் தோழி விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

வீட்டை விட்டு வெளியூர் சென்று தங்கி பணிபுரியும் பெண்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மூலம், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் தோழி என்ற தலைப்பில் விடுதிகள் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இரண்டு புதிய பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஏழு மகளிர் விடுதி கட்டடங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த மாதம் 13ந் தேதி திறந்து வைத்தார்.

திருச்சி மற்றும் கூடுவாஞ்சேரியில் இரண்டு புதிய மகளிர் விடுதிகளும் சென்னை அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர் , சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் விடுதிகளும் இதில் அடங்கும்.

தனியார் விடுதிகள் வசூலிக்கும் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில் விசாலமான தங்கும் அறைகள் கொண்ட விடுதிகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. மின்சார பயன்பாடு மற்றும் இன்னும் பிற வசதிக்கும் கட்டணங்கள் இல்லை.

பாதுகாப்பிற்கு விடுதியை சுற்றியும் CCTV கண்காணிப்பு கேமரா, கைரேகை பதிவு செய்து உள்ளே நுழையும் பையோமெட்ரிக் முறை, 24 மணி நேரமும் தண்ணீர் சேவை, சுதிகரிப்பட்ட RO குடிநீர், Wifi வசதி, வாஷிங் மெஷின், ஐயன் பாக்ஸ், குளிப்பதற்கு வெந்நீர், சுத்தமான கழிவறைகள், வாகனம் நிறுத்தும் பார்க்கிங் வசதி என தனியாரை விட அதிகமான வசதிகள் கொடுக்கப்படுகின்றன.

பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி கல்வி பயிலும் மகளிரும் தோழி விடுதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக, தனி நபர் அறை, இருவர் பகிர்ந்து கொள்ளும் அறை, நான்கு நபர்கள் மற்றும் ஆறு நபர்கள் பகிர்ந்து கொள்ளும் அறை என வெவ்வேறு வகையான அறைகள் தோழி விடுதிகளில் உள்ளன.

தோழி விடுதியில் அறை தேவைப்படுபவர்கள் ஆன்லைன் வாயிலாகவே தங்களுக்கு தேவையான அறைகளை http://tnwwhcl.in என்ற தோழி விடுதியின் இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற  தகவல்களையும் தெரிந்து கொண்டு வேண்டிய அறையினை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கிடையில் வடபழனி, செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரத்திலும், கிருஷ்ணகிரியில் ஓசூர் உள்ளிட்ட 2 இடங்களிலும், திருவண்ணாமலையில் ஒரு இடத்திலும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments