ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணாமலை நடைபயணம்..! ரேசன் கடைகளில் பனங்கருப்பட்டிகளை விநியோகிக்க கோரிக்கை..
தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பனங்கருப்பட்டிகளை விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலையின் என் மண்; என் மக்கள் நடைபயணத்தின் மூன்றாம் நாள் யாத்திரை இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காந்தி சிலை அருகில் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கான பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, சாயல்குடி அருகே எல்லைபிஜ்ஜை என்ற கிராமத்தில் பனைத் தொழிலாளர்களை சந்தித்த அண்ணாமலை அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர், பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் இணைந்து பனை வெல்லம், நுங்கு சாப்பிட்ட அவர் பனை ஓலையில் பதநீரும் அருந்தினார்.
பின்னர் பேட்டியளித்த அண்ணாமலை, பனை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பல பிரச்சனைகள் உள்ளதால், அவர்களது வாழ்வாதாரம் காக்க தமிழ்நாடு அரசு உரிய உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.
கஷ்பட்டு பதநீர் காய்ச்சி கருப்பட்டி விற்பவர்களுக்கு, அதன் விற்பனை விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைப்பதாக அண்ணமலை கூறினார். பனங்கருப்பட்டிகளை அரசே கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விநியோகித்தால் பெரிய மறுமலர்ச்சி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போது பனை மரம் ஏறுவோருக்கு இருக்கும் ஃபிட்னஸ் அவர்களது தலைமுறைக்கு இருக்காதென்பதால், மரம் ஏறி பனை வெல்லம் தயாரிக்கும் கடைசி தலைமுறையாக மாறி விடக்கூடும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
வாரிசு அரசியல் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை, பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வில் ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒருவரின் மகன் எம்.பி., எம்.எல்.ஏ.ஆக இருப்பது வாரிசு அரசியல் இல்லை என்றார்.
Comments