45 நாட்களில் கோடீஸ்வரர்.... தக்காளி விற்ற பணத்தை அலமாரியில் அடுக்கி வைத்து கும்பிடும் விவசாயி குடும்பம்...!
தக்காளி பயிரிட்டு 45 நாட்களில் கோடீஸ்வரராக மாறிய விவசாயி, அலமாரியில் பணத்தை வைத்து அதனை சாமியாக கும்பிட்டு வருகிறார்.
தக்காளி இல்லாமல் குழம்பு வைத்து விடலாமா என இல்லத்தரசிகள் யோசிக்கும் அளவிற்கு அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், சமையலில் தக்காளியை குறைவாக பயன்படுத்தி வரும் நிலையில், தக்காளியை விற்பனை செய்தே ஒரு விவசாயி 45 நாட்களில் கோடீஸ்வராக மாறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி முரளி. கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக தக்காளி பயிரிட்டு வரும் முரளி, தற்போதைய விலை ஏற்றத்தால் மிகப்பெரிய அளவில் லாபம் அடைந்துள்ளார்.
சுமார் 4 அடி உயரம் கொண்ட தக்காளி செடியிலிருந்து இதுவரை 35 முறை அறுவடை செய்து விட்டதாகவும், கடந்த 45 நாட்களில் மட்டும் ஏக்கருக்கு 8 ஆயிரம் கிலோவுக்கு மேல் தக்காளி அறுவடை செய்து கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டியதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் முரளி.
கோலார் வேளாண் சந்தையில் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், 130 கி.மீ தூரம் பயணம் செய்து தக்காளியை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார் முரளி. இன்னும் 15 முதல் 20 முறை தக்காளி அறுவடை செய்யலாம் என ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சியில் தெரிவித்தார் முரளி.
தக்காளி விற்று கிடைத்த பணம் 50 ஆயிரத்தை தனது தந்தை ஒருமுறை வீட்டுக்கு கொண்டு வந்து அலமாரியில் வைத்தார், அந்த அலமாரியை குடும்பமே தொட்டு வணங்குவோம் என்று நினைவுகூர்ந்த அதே அலமாரியில் நான் கோடிக்கணக்கில் பணம் வைப்பேன் என நினைத்து கூட பார்த்ததில்லை என்றார்.
மகன் பொறியியலும், மகள் மருத்துவமும் படிக்கும் நிலையில், கடன்களை எல்லாம் அடைத்த பிறகும், தங்கள் வீட்டு அலமாரியில் 2 கோடி ரூபாய் வைத்துள்ளேன் என்று மகிழ்ந்தார் முரளி.
இப்போது மகிழ்ச்சி தெரிவிக்கும் முரளியின் விவசாய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அதில் பல சோகங்களும் நிறைந்துள்ளன. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால் சுமார் ஒன்றரை கோடி நஷ்டத்தை சந்தித்த முரளிக்கு, அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் போதிய விளைச்சலும் இல்லாமல் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார்.
எனினும், மனம் தளராமல் விவசாயத்தில் ஈடுபட்டு இப்போது லாபம் ஈட்டியுள்ள முரளி, விளைச்சல் இல்லாமல் கடன் ஏற்படலாம், ஆனால் விவசாயத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதனை மதிப்பவர்கள் ஒரு போதும் தோல்வியடைய மாட்டர்கள் என தெரிவித்தார்.
லாபமாக கிடைத்த பணம் மூலம் மேலும் நிலம் வாங்கி நவீன தொழில்நுட்பத்துடன் மிகப் பெரிய அளவில் தோட்டக்கலையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் முரளி.
நம்பிக்கையோடு உழைத்தால் என்றாவது ஒருநாள் சிகரத்தை அடைய முடியும் என்பதற்கு விவசாயி முரளியும் ஒரு எடுத்துக்காட்டாக மாறி உள்ளார்.
Comments