விற்பனை சரிவில் இ-பைக்.... குறைக்கப்பட்ட மானியம் மீண்டும் கிடைக்குமா....?

0 4528

மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளதால், வாகனங்களின் விலை உயர்ந்து விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ள வாகன விற்பனை டீலர்கள், குறைக்கப்பட்ட மானியத்தை மீண்டும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக வாகனங்களை இயக்குவதற்கு உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி இந்தியாவில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கம் வகையில், (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) FAME என்ற திட்டத்தை 2015ம் ஆண்டு கொண்டு வந்தது மத்திய அரசு.

இத்திட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்து, 2019-ம் ஆண்டு முதல் FAME- 2 என்ற இரண்டாம் கட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.

அதில், இ-பைக் உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவில் அதிகபட்சம் 40 சதவீதம் வரையில் மானியமாக வழங்கப்பட்டதால், வாகனத்தின் விலையும் கணிசமாக குறைவாக இருந்தது.

FAME- 2 திட்டம் மே மாதத்தோடு நிறைவடைந்ததால், வழங்கப்பட்டு வந்த 40 சதவீத மானியத்தை மத்திய அரசு 15 சதவீதமாக குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஜூன் 1-ம் தேதி முதல் ஒரு டூவீலரின் விற்பனை விலை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் விற்பனையாளர்கள்.

விலையேற்றத்தின் காரணமாக, ஓலா S1 புரோ, டி.வி.எஸ் ஐகியூப், ஏதர் 450X உள்ளிட்ட 5 முக்கிய நிறுவனங்களின் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் நடப்பாண்டு ஜனவரியில் 64,684 இ பைக் விற்பனையான நிலையில் படிப்படியாக உயர்ந்து மே மாதத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 459 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. ஆனால், ஜூலையில் தற்போது வரையில் 34,991 வாகனங்கள் மட்டுமே விற்பனையானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாதத்திற்கு 30 முதல் 35 டூவீலர்களை விற்பனை செய்து வந்த தங்களால் தற்போது 5 வாகனங்களை கூட விற்க முடியவில்லை என தெரிவித்தனர் விற்பனையாளர்கள். சுற்றுச்சூழலை மேம்படுத்தவே மானியம் வழங்கப்பட்டு வந்ததால் குறைக்கப்பட்ட மானியத்தை மீண்டும் வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர் விற்பனையாளர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments