கல்வியாளர்களுடன் ஆலோசிக்காமல் உயர்கல்வியில் பொதுப்பாடத்திட்டம் - இ.பி.எஸ். கண்டனம்
கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வித் துறையில் பொது பாடத் திட்டத்தை இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு புகுத்த நினைப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் பொன்முடி, தான் ஒரு கல்வியாளராக இருந்ததை மறந்து உயர்கல்வித்துறையின் வளர்ச்சி பற்றி கவலைப்படாததால், அத்துறை அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
பொது பாடத்திட்டத்தால் தமிழக உயர்கல்வியின் தரம் குறையும் என்றும், யூ.ஜி.சி. சார்பில் 45 ஆண்டுகளுக்கும் மேல் வழங்கப்படும் தன்னாட்சி அந்தஸ்த்தை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, கல்வித்துறையில் மாறுதல்கள் கொண்டுவரும் முன், கட்சி கண்ணோட்டம் இல்லாத கல்வியாளர்களுடன் ஆலோசித்து கொள்கையை அமல்படுத்துமாறு அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Comments