எதிர்க்கட்சிகள் மீது அமித்ஷா விமர்சனம்.. அண்ணாமலை நடைபயணம் தொடக்கம்..!
எதிர்க்கட்சியினர் குடும்பத்தினரின் எதிர்காலத்தை மட்டுமே நினைப்பதாகக் கூறியுள்ள அமித்ஷா, நாட்டின் நலனைப் பற்றி அக்கறையுள்ள ஒரே நபர் பிரதமர் மோடி மட்டுமே எனத் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் என் மண், எண் மக்கள் நடைபயணத்தை அவர் தொடங்கி வைத்தார்.
ராமேஸ்வரத்தில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரம்மாண்ட துவக்க விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடி என்ன செய்தார் என்ற பெயரில் மத்திய அரசின் சாதனை விளக்க புத்தகம் வெளியிட்டார்.
விழாவில் பேசிய அண்ணாமலை, ஐ.நா. சபையில் இருந்து பட்டி தொட்டி எங்கும் தமிழின் பெருமையை பிரதமர் பரப்பி வருவதாகவும் பிரதமர் மோடி இதயத்தால் தமிழராக இருந்து வருகிறார் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் அரசு என்பது ஒரு குடும்பம் சார்ந்து, கொள்ளையடிக்கும் இயந்திரமாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
உலகின் மூத்த மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டு பேச்சைத் துவக்கினார் அமித் ஷா. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்ட அமித் ஷா, நாட்டிலேயே ஊழல் மிகுந்தது தி.மு.க. அரசு தான் என்று கூறினார்.
சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா என்று கேள்வி எழுப்பிய அமித் ஷா, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய முன்வந்தாலும், அவர் ரகசியங்களை வெளியிட்டு விடுவார் என்ற அச்சத்தில் அதை ஏற்க முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் குடும்பத்தினரின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொள்வதாக கூறிய அமித் ஷா, நாட்டின் நலனைப் பற்றி அக்கறையுள்ள ஒரே நபர் பிரதமர் மோடி மட்டுமே என்றார். 2024 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Comments