நிலக்கரியே தான் வேணுமா..? சூரியன்.. காற்றாலை மின்சாரம் வேணாமா ? துண்டாடப்படும் விளை நிலங்கள்..! கோபத்தில் கொந்தளிக்கும் விவசாயிகள்
கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள் வழியாக என்.எல்.சி நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கான கால்வாய் அமைத்து வரும் நிலையில் பல ஏக்கர் கணக்கில் நெற்பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து விவசாயிகள் போர்க்குரல் எழுப்பி உள்ளனர்.
என். எல்.சி நிர்வாகம் இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கொடுத்தால்.. அறுவடை முடிஞ்சிருக்குமே.. அதற்கு அப்புறம் இப்படி நடந்திருந்தா... கூட பெரிய அளவிலான பயிர் இழப்புகளை தவிர்த்திருக்கலாமே என்று விவசாயத்தின் அருமை தெரிந்தோரை எல்லாம் ஆதங்கப்பட வைத்துள்ள இந்த சம்பவம் கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் அரங்கேறி வருகின்றது.
நெல்லு விளையிற பூமியை... பருவத்து பயிரோடு சேர்த்து மண்ணோடு மண்ணாக அழிக்கும் இந்த செயலை செய்துவரும் என்.எல்.சியின் 2 வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கும், இதற்கான பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நிலங்களை மாவட்ட நிர்வாகம் என்.எல்.சிக்காக கையகப்படுத்தி இழப்பீடும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், நிலத்தில் அத்துமீறி பயிர்செய்து வைத்துக் கொண்டு விவசாயிகள் மல்லுக்கு நிற்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே தமிழகத்தில் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக்கப்படுவதால், பயிர் செய்யும் பரப்பளவு குறைந்து வரும் நிலையில் நன்றாக விளைச்சல் தரக்கூடிய விளைநிலங்களை இதுபோல நிலக்கரிக்காக வெட்டித் துண்டாடுவது எப்படி ஏற்புடையதாக இருக்கும் என்று கொந்தளிக்கும் விவசாயிகள் இழப்பீடுத் தொகை தங்களுக்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்தனர்.
விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்குள்ள கிராமங்களில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருளுக்காக நிலக்கரியை பயன்படுத்துவதால் காற்றுமாசு ஏற்படுவதாகவும், அதனால் ஓசோன் மண்டலம் கடுமையான பாதிப்பு அடைந்து வருவதாகவும் கூறி பல்வேறு நாடுகள் மாற்று எரிபொருளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன.
இயற்கையில் கிடைக்கும் நிலக்கரி, பெட்ரோல் , டீசல் , கியாஸ் போன்றவற்றை கைவிட்டு புதுப்பிக்கத்தக்க, மாசு இல்லாத மரபுசாரா எரிபொருளைப் பயன்படுத்தி எரிபொருளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சூரியன், காற்று, அலைகள், நீர், உயிரி எரிபொருள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதை விடுத்து மீண்டும் பழைய நிலையையே பின்பற்றும் விதமாக தமிழகத்தில் எல்.எல்.சி 2-வது சுரங்கப்பணிகளை தொடங்க அனுமதி வழங்கி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஒரு காலத்தில் மாற்று எரிபொருள் குறித்த புரிதல் இல்லாததால் நிலக்கரி அத்தியாவசிய தேவையாக இருந்தது. அதற்காக நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டது.
இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் காணாமல்போய் பாலைவனம் போல காட்சி அளிக்கும் சூழலில், மரபுசாரா எரிபொருளுக்கு மாறாமல் தற்போது மீண்டும் நிலக்கரிக்காக பல நூறு ஏக்கர் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தி துண்டாடுவதை அரசு கைவிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.
Comments