காவலர்... டாக்டராகிறார்...! இது நீட் தேர்வாலும்... 7.5 சதவீத இட ஒதுக்கீட்டாலும் சாத்தியமானது..! விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றி

0 5807

நீட் தேர்வு மூலம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியின் மகனான 24 வயது காவலர் ஒருவருக்கு , கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் மருத்துவப்படிப்பில் நுழையும் காவலரின் விடாமுயற்சி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக்கூலித் தொழிலாளிகளான மாணிக்கம் - இன்பவள்ளி தம்பதியரின் மகன் சிவராஜ்.

2016-ஆம் ஆண்டு பென்னாகரம் அரசு மேல் நிலையில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 915 மதிப்பெண் பெற்ற சிவராஜ்க்கு, டாக்டராக வேண்டும் என்பதே ஆசை. ஆனால், அவர் பெற்ற மதிப்பெண்கள் அந்த கனவு நிறைவேற போதுமானதாக இல்லை.

அதன் பின்னர் கல்லூரியில் பிஎஸ்சி சேர்ந்து படித்து முடித்த சிவராஜ், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவலருக்கான தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்து ஆவடி பட்டாலியனில் கடந்த மூன்று ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இதற்கிடையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு அதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதால் 24 வயதான சிவராஜுக்கு மீண்டும் மருத்துவம் படிக்கும் ஆசை ஏற்பட்டது.

வறுமையின் காரணமாக பட்டப்படிப்பை முடித்தவுடன் ஏதோ ஒரு வேலைக்கு செல்லலாம் என்று இருந்த சிவராஜ் காவலராக பணிபுரிந்து வந்த போது ஏன் நீட் தேர்வு எழுதி தனது மருத்துவராகும் கனவை நிறைவேற்றக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது

தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்த சிவராஜ் தனது வேலைகளுக்கிடையில் நீட் தேர்வுக்கு ஆயத்தமானார்.

சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்கு கொடுத்து உதவவேண்டிய நிலையில் இருந்த சிவராஜிக்கு தனியாக கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து நீட் தேர்வுக்காக தயாராகவதற்கான சூழல் இல்லை.

இதனால் அவரே தனது நண்பர்கள் மூலம் புத்தகங்களை சேகரித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக படித்து பயிற்சி பெற்றுள்ளார்

கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்ட சிவராஜிற்கு 290 மதிப்பெண்கள் தான் கிடைத்தது. என்றாலும் விடாமுயற்சியாக மீண்டும் கடந்த ஒரு வருடமாக படித்து இந்த முறை 400 மதிப்பெண்களை பெற்றுள்ளார் சிவராஜ்.

இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த சிவராஜுக்கு மருத்துவக் கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது.

வறுமையாலும் சூழலாலும் வாய்ப்பு தள்ளி போகலாம், எட்டிப் பிடிக்க முயன்று கொண்டே இருந்தால் வாய்ப்பு வரும் போது எட்டாக்கனி வெற்றிக்கனியாகும் என்பதற்கு எம்பிபிஎஸ் மாணவரான, காவலர் சிவராஜ் மற்றும் ஒரு உதாரணம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments