86 வயதில் காலமானார் ‘தூரிகைகளின் வேந்தர்’ ஓவியர் மாருதி..!

0 2123

தமிழ் வார இதழ்களில் ஆயிரக்கணக்கான படங்களை வரைந்து புகழ்பெற்ற ஓவியர் மாருதி உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 86. ஓவியங்களுக்கு தூரிகையால் உயிர்கொடுத்த படைப்பாளியின் திறமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

தான் வரையும் ஒவ்வொரு ஓவியத்தின் கண்களுக்கும், தூரிகையால் உயிர்கொடுத்து, காண்போரின் உள்ளத்தை கனவை விதைக்கும் உன்னத படைப்பாளி புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட ஓவியர் ரங்கனாதன் என்கிற மாருதி..!

மாடர்ன் ஆர்ட் என்ற பெயரில் வர்ணங்களை சிதறவிட்டு புரியா ஓவியங்களை உலக ஓவியங்களாக கொண்டாடுவோர் மத்தியில், 1969 முதல் எளிய மக்களையும், ஒவ்வொரு வாசகரையும் கவரக்கூடிய ஜனரஞ்சகமான ஓவியங்களை நடமாடும் சிற்பங்களாக தமிழ் வார இதழ்களுக்கு வடித்துக் கொடுத்தவர் ஓவியர் மாருதி ..!

அந்த கால வாசகர்களுக்கும்... இடைக்கால வாசகர்களுக்கும்... எப்போதும் ஸ்பெசலாக கருதப்படும் 90 களின் குழந்தைகளுக்கும்... மாருதி தனது ஓவியங்களின் மூலம் பல கற்பனை தேவதைகளை ஓவியங்களாக உருவாக்கிக் கொடுத்தவர்

வார இதழ்களில் மாருதியின் ஓவியங்களால், பல கதைகளின் நாயகிகள் பேரழகு பெற்றனர் என்றால், பல தொடர் கதைகளை இவரது ஓவியங்கள் சினிமா பார்ப்பதற்கு இணையாக வாசகர்கள் மனதில் கொண்டு சேர்த்தது. இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது, ஓவியர்கள் சார்பாக அவருக்கு தூரிகைகளின் வேந்தர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கதைவசனம் எழுதிய உளியின் ஓசை மற்றும் பெண் சிங்கம் படங்களுக்கு ஆடைவடிவமைப்பாளராகவும் ஓவியர் மாருதி பணிபுரிந்துள்ளார்.

கடைசி வரை ஓவியம் வரைவதை விடாமல் தொடர்ந்து வந்த மாருதி, தனது 86 ஆவது வயதில் , புனேவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் அவரது ஓவியங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் மாருதியின் பெயர் என்றென்றும் அவர் புகழை உலகெங்கும் கொண்டு சேர்க்கும்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments