அதிகாரிகள் கமிஷன் வாங்க போயிருக்காங்க... ஆவேசமான எம்.எல்.ஏ ..! அடுத்த சில நிமிடங்களில் அடங்கியது எப்படி ?

0 2629

கமிஷன் வாங்குவதற்கு அரசு வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சேலம் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டிய பா.ம.க எம்.எல்.ஏ சதாசிவத்தை, அதிகாரி துணையுடன் மற்றொரு எம்.எல்.ஏ சமரசம் செய்தார்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு வேகவேகமாக காரில் வந்து இறங்கினார் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் சதாசிவம்.
அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளர் இல்லாததால் தான் ஏற்கனவே தயாராக கொண்டு வந்திருந்த தனது லெட்டர் பேடை நோட்டீஸாக அறையின் முகப்பு பகுதியில் ஒட்டினார்

அந்த நோட்டீஸில் கடந்த மூன்று நாட்களாக வந்து செல்கிறேன். ஆனால் அதிகாரி யாரும் இருப்பதில்லை அவர்களது சொந்த வேலைக்கு அரசு காரை எடுத்து செல்கிறார்கள். கமிஷன் தொகை வசூலிக்க செல்கிறார்கள் இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லெட்டர் பேடில் தனது கையெழுத்துடன் குறிப்பிட்டிருந்தார்

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த, பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி அவசர அவசரமாக வந்து எம்.எல்.ஏ கையைப்பிடித்து மேலே வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்று அழைத்தார். முதலில் மறுத்தாலும் சமாதனப்படுத்தும் மாமியாரிடம் பவுசுகாட்டும் மருமகள் போல பேசிக் கொண்டே அதிகாரியுடன் சென்றார் எம்.எல்.ஏ. சதாசிவம். தகவலறிந்து வந்த பா.ம.கவின் மற்றொரு எம்.எல்.ஏவான அருளும், சதாசிவத்தை சமாதானம் செய்தார்.

அதிகாரியுடனான சந்திப்பிற்கு பின்னர் தாங்கள் இருவரும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை மட்டுமே தெரிவித்ததாகவும், வேறு எந்த பிரச்னையும் இல்லையென கூறினார் எம்.எல்.ஏ அருள்.

நான் வந்த 3 முறையும் அதிகாரிகள் இல்லாததாலும், ஏற்கனவே அளித்த கோரிக்கை மனுக்களுக்கு பதில் அளிக்காததால் சற்று கோபமடைந்து விட்டதாக சமாளித்தார் எம்.எல்.ஏ. சதாசிவம்

கமிஷன் வாங்குவதற்காக அதிகாரிகள் சென்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்களே என்று எம்.எல்.ஏவிடம் கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.

கண்காணிப்பு பொறியாளரை தாங்கள் ஏற்கனவே சந்தித்தாக தகவல் உள்ளதே என்றும் கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.

ஒருவழியாக பேட்டியை முடித்துக் கொண்டு இரண்டு பா.ம.க. எம்.எல்.ஏக்களும் கிளம்பிச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments