தடையை மீறி செயற்கை நிறமூட்டிகள் கலந்து குழல் அப்பளம் தயாரித்த அப்பள நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
சேலத்தில் 4 அப்பள நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி செயற்கை நிறமூட்டிகள் கலந்து குழல் அப்பளம் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் செயற்கை நிறமூட்டிகள் கலந்து குழல் அப்பளம் தயாரிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, 4 நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் சிவதாபுரத்தில் உள்ள ருத்ரா டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் 300 கிலோவும், கந்தம்பட்டியில் உள்ள சீனிவாசன் புட் புராடாக்ட்ஸ் என்ற நிறுவனத்தில் 3 ஆயிரத்து 440 கிலோவும், செயற்கை நிறம் கலந்த குழல் அப்பளங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள அப்பளங்களின் மாதிரி சென்னையில் உள்ள அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்துவரும் சோதனை முடிவுகளின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments