கார்கில் வெற்றி தினம் : உயிர் நீத்த வீரர்களுக்கு இந்தியா முழுவதும் மரியாதை

0 1234

உறையச் செய்யும் குளிர்..! நடுங்க வைக்கும் உயரம்..! லடாக்கில் உள்ள கார்கில் பனிமலைச் சிகரப் பகுதியை கைப்பற்ற 1999-ஆம் ஆண்டு முற்பட்டது பாகிஸ்தான் ராணுவம். இந்திய ராணுவ வீரர்கள் பலர் இன்னுயிரைத் தந்து அண்டை நாட்டு ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்து மூவர்ணக் கொடியை நிலைநாட்டியதைக் குறிக்கும் நாள், கார்கில் விஜய் திவஸ்!

நாட்டைக் காக்க உயிர் தியாகம் செய்து போரின் வெற்றிக்கு வழி வகுத்த வீரர்களின் நினைவைப் போற்றி வணங்குவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ட்வீட் செய்துள்ளார்.

நாட்டின் துணிச்சல் மிக்கவர்களின் வீர வரலாற்றை கார்கில் வெற்றி தினம் கண் முன்னே கொண்டு வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தனர். அப்போது போர் நினைவிடத்திற்கு மேல் நான்கு மிக்-29 ரக போர் விமானங்கள் பறந்து மரியாதை செலுத்தின.

சீட்டல் ரக ராணுவ ஹெலிகாப்டர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தின.

ராணுவ வீரர்கள் மெழுகுவர்த்திகள் ஏற்றி உயிர்த்தியாகம் செய்த சக வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சாரணர்கள் இசைக்குழு தேச பக்திப் பாடல்களை இசைத்தது. ராணுவ வீரர்கள் சிலரும் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் பாடல்களை பாடினர்.

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக நினைவுக் குடில் என்ற பெயரில் திராசில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

பின்னர் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், கார்கில் யுத்தத்தில் வென்ற போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை இந்திய ராணுவம் தாண்டிச் செல்லவில்லை என்றும் சர்வதேச சட்டங்களை இந்தியா எப்போதும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், இந்தியா தனது கவுரவம் மற்றும் கண்ணியத்தை காத்துக்கொள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி செல்லக்கூடத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments