அகிம்சையைப் போதித்த இந்தியாவுக்கு ஆயுதங்களாலும் அடி கொடுக்கத் தெரியும் என உலகுக்கு பறைசாற்றிய வெற்றி தினம் இன்று.. !!
கார்கில் சிகரங்களைக் கைப்பற்ற முயன்ற பாகிஸ்தானை இந்திய ராணுவம் விரட்டியடித்து வெற்றி கொண்ட கார்கில் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாதனைச் சரித்திரத்தைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு....
1999ம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த உளவுத்துறை தகவலையடுத்து ராணுவத்தினர் உஷார் படுத்தப்பட்டனர்.
ரத்தத்தை உறைய வைக்கும் குளிரில் கார்கில் பகுதிக்குச் சென்ற இந்திய ராணுவ வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அங்கு வந்திருந்தது தீவிரவாதிகள் அல்ல பாகிஸ்தான் ராணுவம் என்பதைக் கண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்குள், எதிரிகள் 130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஆக்கிரமித்திருந்தனர்.
டைகர் குன்றுகள், திராஸ் மலைக் குன்றுகள், சிந்து நதியின் கிழக்கில் உள்ள படாலிக் பகுதி என இந்திய நிலைகளை கைப்பற்றியதோடு, ராணுவ தளங்களையும் அமைத்திருந்தது பாகிஸ்தான். அவர்களின் அடுத்த குறி ஸ்ரீநகர், லே தேசிய நெடுஞ்சாலை என்பதை உணர்ந்த இந்தியா அதிவேகமாகக் களமிறங்கியது. அதற்கு ஆப்ரேஷன் விஜய் என்று பெயரும் சூட்டப்பட்டது.
உலகிலேயே மிக உயரமான இடத்தில் இரு தரப்பும் போரில் குதித்தன. ஆனால் எதிர்பார்த்ததை விட போர்க்களம் மிகவும் கடினமாக இருந்தது. துப்பாக்கிகள் தட தடக்கும் சப்தமும், பீரங்கிகளின் குண்டு மழையும் பனிப் பிரதேசத்தை கிடு கிடுக்க வைத்தன.
பகல் பொழுதில் இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த... இரவில் தரைப்படையினர் அங்குலம் அங்குலமாக முன்னேறி எதிரிகளை துவம்சம் செய்தனர்...
சுமார் 85 நாட்கள் இடைவிடாது நடந்த தாக்குதலில் 527 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து வெற்றியை ஈட்டித் தந்தனர். பாகிஸ்தான் தரப்பிலோ, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இழக்க நேரிட்டது. அகிம்சையைப் போதித்த இந்தியாவுக்கு ஆயுதங்களாலும் அடி கொடுக்கத் தெரியும் என உலகுக்கு பறைசாற்றிய வெற்றி தினம் இன்று.
Comments