2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் - பிரதமர் மோடி
கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைப்பதன் மூலம் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று எதிர்க்கட்சிகளை சாடியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை அடிமைப்படுத்திய கிழக்கு இந்தியா கம்பெனியின் பெயரிலும் அது இடம்பெற்றதாக கூறியுள்ளார்.
தீவிரவாத அமைப்புகளான இந்தியன் முஜாகிதீன் மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றின் பெயரிலும் இந்தியா என்ற வார்த்தை உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர், திக்கு திசை தெரியாத இதுபோன்ற எதிர்க்கட்சிகளை நாடு இதுவரை கண்டதில்லை என்றார்.
கிழக்கு இந்தியா கம்பெனி போல், மக்களிடம் கொள்ளையடிக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றனவா என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.
தோல்வியடைந்த, நம்பிக்கையற்ற, குறிக்கோளற்ற கூட்டணியாக எதிர்க்கட்சிகள் உள்ளதாகவும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் விவாதத்தில் இருந்து அவை விலகி ஓடுவதாகவும் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், அப்போது இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Comments