செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தை அணுக உத்தரவு.. !!
செந்தில் பாலாஜி கைது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு மேகலா மற்றும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நாளையுடன் முடிவடைகிறது.
ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த பின் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி நிஷா பானுவும் கைது சட்டவிரோதமானது அல்ல என்று நீதிபதி பரத சக்கரவர்த்தியும் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்பதாக அறிவித்தார்.
எனினும், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவலாக கணக்கிடுவது மற்றும் அமலாக்க துறை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக தீர்மானிக்க வழக்கை மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
அதன்படி நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவல் குறித்து முடிவு செய்யவே மூன்றாவது நீதிபதி வழக்கை இரு நபர் அமர்வுக்கு பரிந்துரைத்ததாகவும், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் உள்ளதால் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தான் அளித்த தீர்ப்பில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
பொரும்பான்மை தீர்ப்பு வேறு மாதிரியாக இருப்பதால் இந்த வழக்கில் தாம் சொல்வதற்கு ஏதுமில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி நிஷா பானு, கைது சட்டவிரோதம் என்பதில் தாம் உறுதியாக உள்ள போது அமலாக்கத்துறை காவலுக்கு எப்படி உத்தரவிட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளதால் காவல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.
நீதிபதி பரத சக்கரவர்த்தியும் நீதிபதி நிஷா பானு கூறியபடி உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு கூறி, அமலாக்கத்துறை கஸ்டடியில் கேட்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உச்சநீதிமன்றத்தில் முடிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதனிடையே, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் புதன்கிழமை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்படக் கூடும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments