உழைப்பிற்கு தடையேது..? தன்னம்பிக்கை தளராமல் போராடும் மாற்றுத்திறன் பெண்...!
நீயெல்லாம் ஏன் டெலிவரி செய்ய வர்ற, வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே என்ற பழிச்சொல்லையும் தாண்டி தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறார் சென்னை மாற்றுத்திறனாளி பெண்.
பரபரக்கும் சென்னை சாலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாகனத்தில் சென்று உணவு விநியோகம் செய்து வரும் இவர் தான் ரிஹானா.
வெட்டுவான்கேணியில் குடும்பத்தோடு வசித்து வரும் மாற்றுத்திறனாளி பெண்ணான ரிஹானா சொமோட்டா நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தன்னுடைய சிறு வயதில் போலியோ தாக்கத்தால் கால்கள் முடங்கிய நிலையில், ஒரு அடி நகரக் கூட பிறரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலையிலும் 10-ம் வகுப்பு படித்துள்ளார் ரிஹானா.
வீட்டில் இருந்துக் கொண்டே வேலை பார்த்து வந்தது மன சோர்வை அளித்ததால் வெளி உலகில் சகஜமாக இருக்க வேண்டும் என்பதற்காக உணவு டெலிவரி பணியை தேர்வு செய்ததாக கூறினார் ரிஹானா.
காலை 11 மணிக்கு பணியை தொடங்கி, இரவு 8 மணி வரையில் பல்வேறு விதமான நபர்களை சந்திக்க முடிவதாகவும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம் என்கிறார் ரிஹானா.
சாலையில் வாகனத்தில் செல்லும் போது தன்னை சிலர் ஏளனமாக பார்ப்பதாக வருத்தம் தெரிவித்த ரிஹானா இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சில நேரங்களில் நீங்க எல்லாம் ஏன் டெலிவரி செய்யும் வேலைக்கு வர்றீங்க, என மனம் நோகும் வகையில் சிலர் பேசுவதாக தெரிவித்தார் ரிஹானா.
சில அடுக்குமாடி குடியிருப்புகளில் உணவு டெலிவரி செய்வோரை விடுவதே இல்லை என கூறும் ரிஹானா, அவர்களும் சக மனிதர்கள் தானே என கேள்வி எழுப்பி உள்ளார்.
தன்னம்பிக்கையோடு உழைக்கும் அனைவரும் சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டியவர்களே எனக் கூறும் ரிஹானா அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை தரும் பெண்ணாக உள்ளார்.
Comments