மதம் கடந்து காதல் திருமணம்.... விடிய, விடிய உறவினர்கள் போராட்டம் ...

0 4368

கடலூரில் மதம் கடந்து காதல் திருமணம் செய்துக் கொண்ட பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு உறவினர்கள் விடிய விடிய நடத்திய போராட்டத்தினால் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர் புதுமண தம்பதி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வரும் விஜயபாஸ்கர், சவாரிக்குச் சென்ற இடத்தில் திருவதிகையைச் சேர்ந்த ஆயிஷா பேகத்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது. காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு வந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷா விழுப்புரத்தில் வைத்து விஜயபாஸ்கரை சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

இதனை தெரிந்து கொண்ட ஆயிஷாவின் பெற்றோர் பண்ருட்டி காவல் நிலையத்திற்குச் சென்று மகளைக் காணவில்லை என புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி, புதுமண ஜோடியை தேடி கண்டுபிடித்து சனிக்கிழமை இரவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பெண்ணின் தரப்பினர் அதிகளவில் திரண்டு வந்து திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர் போலீஸார். அப்போது, காதல் திருமணம் செய்து கொண்ட விஜயபாஸ்கர் உடனே தான் செல்வதாக தெரிவித்தார் ஆயிஷாபேகம்.

இருவரும் திருமண வயதை அடைந்திருந்ததால் அவர்களது முடிவே இறுதியானது எனத் தெரிவித்த போலீஸார் ஆயிஷாவை விஜயபாஸ்கருடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால், தங்களை ஆயிஷாவுடன் பேசுவதற்கு போலீஸார் குறைந்த நேரமே கொடுத்ததாகவும், கூடுதல் நேரம் கொடுத்திருந்தால் மகள் தங்களுடன் வந்திருப்பார் என பெற்றோர் ஆதங்கத்துடன் கூறினர்.

இதனையடுத்து, ஆயிஷாவின் பெற்றோருக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் திரண்டு இரவு 11 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்ணுடன் பேசுவதற்கு காலையில் ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.

இந்தநிலையில், பண்ருட்டி காவல் நிலையம் சென்றால் பாதுகாப்பு இருக்காது எனக் கருதிய புதுமண ஜோடியினர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தகவலறிந்த பெண்ணின் தரப்பினர் எஸ்.பி அலுவலகம் சென்று ஆயிஷாவுடன் பேச வேண்டுமென வலியுறுத்தினர்.

அங்கு ஒரு டி.எஸ்.பி தலைமையில் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏறத்தாழ 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெண்ணின் உறவினர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் ஆயிஷா தனது கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர் .

இரவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது காவல் நிலையத்தில் வைத்தே தன்னுடைய கழுத்தை உறவினர்கள் நெரித்ததாக தெரிவித்த ஆயிஷா, தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் ஆயிஷாவை அவரது கணவர் விஜயபாஸ்கருடன் பாதுகாப்பாக காரில் ஏற்றி போலீஸார் அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments