''போதமலை பகுதியில், 31 கி.மீ தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்க ரூ.140 கோடி ஒதுக்கீடு..'' - திமுக எம்.பி KRN.ராஜேஷ் குமார்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அருகே உள்ள போதமலை பகுதியில், 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்க, தமிழ்நாடு அரசு, 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக திமுக எம்.பி KRN.ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடல் மட்டத்தில் இருந்து 3,937 அடி உயரம் கொண்ட போதமலையில், சாலை வசதி இல்லாதது பெரிய குறையாக இருந்தது. கடந்தாண்டு, போதமலையின் கரடுமுரடான பாதையில், நடந்தே சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், கீழுர் ஊராட்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 75 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்.
அப்போதைய நாமக்கல் பெண் ஆட்சியர் ஸ்ரேயா சிங்கும், மலைமீது ஏறிச் சென்று பலரது கவனம் ஈர்த்தார்.
அண்மையில், போதமலை மலைப்பகுதியில் 1 மாத காலமாக மின்சாரம் இன்றி தவித்து வந்த நிலையில், 800 கிலோ எடை கொண்ட டிரான்ஸ்பார்மரை தோல் சுமையாக தூக்கிச் சென்ற காட்சிகளும் வெளியாகின.
இந்நிலையில், போதமலையில் அமைந்துள்ள கீழூர் முதல் மேலூர் வரை 21 கிலோமீட்டர், புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9 கிலோ மீட்டர் என மொத்தம் 31 கிலோ மீட்டர் தொலைவிற்கு, பசுமை தீர்ப்பாய அனுமதியோடு, தார் சாலை அமைக்கப்பட உள்ளதாக, திமுக எம்.பி.ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
3 மாதங்களில் தொடங்கும் சாலை பணிகள் நிறைவடைந்தால், போதமலையில் வசிக்கும் 3,500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களும், மலையைச் சுற்றி 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளும் பயனடைவர்.
மேலும், போதமலையில், சாலை அமைப்பதற்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக, மங்காளபுரம் அருகே உரம்பு பகுதியில், 2 கோடியே 13 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருவதாக, திமுக எம்.பி ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.
Comments