முதியோர் ஓய்வூதியம், கைம்பெண் உதவித் தொகையை மாதம் 1200 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்.. !!
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் முதியோர் மாத ஓய்வூதியம் மற்றும் கைம்பெண் உதவித் தொகையை மாதம் 1200 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக அமைச்சரவையின் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
முதியோர் மாத ஓய்வூதியம் மற்றும் கைம்பெண் உதவித் தொகையை மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் முதல் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள 1 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கான உதவித் தொகையும் ஆயிரம் ரூபாய் இருந்து ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர்,
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை 2 மாதங்களுக்கு முன்பே 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் பயனடைந்து வரும் 30 லட்சத்து 54 ஆயிரம் பேர் இந்த தொகை உயர்வு மூலம் பலன் பெறுவார்கள் என்று தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, காத்திருப்பு பட்டியலில் உள்ள 74 ஆயிரத்து 73 பேரில் தகுதியானோருக்கு உதவித் தொகை வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.
தொகை உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 845.91 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த ஒரு பயனாளியும் விடுபட்டு விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர், தமிழ்நாடு முழுவதும் 35, 925 முகாம்கள் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளதாக கூறினார்.
மகளிர் உரிமைத் தொகைக்காக இதுவரை ஏறத்தாழ 50 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Comments