பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம், நாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் விரிவுபடுத்தப்படும் - பிரதமர் மோடி
இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற ஜி-20 அமைப்பின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர், அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான ஆற்றலுக்காக பணியாற்றுவதே தமது அரசின் இலக்கு என்று கூறியுள்ளார். 2015ல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட எல்இடி விளக்குகள் வழக்கும் திட்டம், தற்போது உலகளவில் மிகப்பெரிய திட்டமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எல்இடி விளக்குகளால் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரத்து 500 கோடி யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுவதாக கூறியுள்ளார். பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு இந்தியா மிகப்பெரிய பங்காற்றி வருவதாகவும், சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியில் உலகில் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாகவும் கூறியுள்ளார். பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம், நாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Comments