மேம்பாலத்தில் வசமாக சிக்கிக்கொண்ட அரசுப் பேருந்து.. முதலமைச்சரின் 'கான்வாய்' வந்த நேரம் என்பதால் பதறி போய் போலீசார் செய்த செயல்..!
சென்னையில் அண்ணா மேம்பாலத்தின் குறுக்கே அரசுப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் தவறால் சிக்கிக் கொண்டது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு வரும் பாதை என்பதால் போலீசார் பொன்விழா கண்ட மேம்பாலத்தை அவசரமாக இடித்து பேருந்தை மீட்டனர்
சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பூவிருந்தவல்லி நோக்கிச் சென்ற 25-ஜி தடம் எண் கொண்ட அந்த பேருந்து, பகல் 12 மணி அளவில் அண்ணா மேம்பாலத்தில் ஏறியது. வடபழனி நோக்கிச் செல்லும் இறக்கத்தில் திரும்பிய போது ஓட்டுனரின் கவனக்குறைவால் மேம்பாலத்தின் இரண்டு பக்க சுற்றுச் சுவர்களுக்கு இடையே பேருந்து வசமாக சிக்கிக் கொண்டது.
பேருந்தை ஓட்டுநர் எவ்வளவோ முயற்சித்தும் வெளியே எடுக்க முடியவில்லை. சரியாக 12-10 மணி அளவில் முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு அந்த வழியாக செல்வதாக வாக்கி டாக்கிகளில் அறிவிப்பு வந்ததை அடுத்து காவல்துறையினர் செய்வது அறியாமல் பதற்றம் அடைந்தனர். வேறு வழி தெரியாததால், பொன்விழா கண்ட அண்ணா மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களை போலீசார் சுத்தியல்களைக் கொண்டு உடைக்கச் செய்தனர்.
சுவர்கள் இடிக்கப்பட்ட பின் பேருந்து மீட்கப்பட்டது. அதற்கு அடுத்த சில நிமிடங்களில் முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு அவ்வழியை கடந்து சென்றது.
Comments