பணம்.. பணம்.. பணம்.. அரசு மருத்துவமனை அவலம் ஒரு பெரியவரின் கண்ணீர்..! எம்புள்ளய கொன்னுபுட்டானுங்க....
கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில்லை என்றும் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் அனைத்திற்கும் பணம் வசூலிக்கப்படுவதாகவும் இளைஞரின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
38 வயதுடைய தனது ஒரே மகனை பறி கொடுத்த பதை பதைப்பில் , கோவை அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து குற்றஞ்சாட்டும் பெரியவர் நாகராஜ் இவர் தான்..!
தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - காளியம்மாள் தம்பதியரின் மகன் ராஜேஷ் குமார் , 38 வயதான இவர் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை டயாலிசிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுநீர் சென்றாலே ரத்தம் போகிறது என தெரிவித்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் தனது மகனுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மருந்து மாத்திரை வெளியே வாங்கி கொண்டு வாருங்கள் என அலைக்கழித்ததாகவும் எல்லாத்துக்கும் காசு கேட்பதாகவும் பதை பதைக்க குற்றஞ்சாட்டினார்
எல்லாம் இலவசம் என்று சொல்லும் அரசு மருத்துவமனையில் எங்கு சென்றாலும் லஞ்சம் கேட்கிறார்கள் என்றும் தனது மகனின் இறந்த உடலுக்கு அருகே பயிற்சி செவிலியர்கள் நடனமாடியதாகவும், தனது மகனுக்கு தானமாக வழங்கப்பட்ட ரத்தத்தை கூட உரிய நேரத்தில் பயன்படுத்தாமல் எம்புள்ளய கொன்னுபுட்டானுங்க என்றும் நாகராஜ் வேதனை தெரிவித்தார்
உயிரிழந்த ராஜேஷ்குமாருக்கு ராமாத்தாள் என்ற மனைவியும் 10 வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்றும் உள்ளனர். இதற்கிடையே இந்த குற்றச்சாட்டு குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா விளக்கம் அளித்தார். சிறுநீர் சென்றால் ரத்தம் போகும் பிரச்சினையோடு தான் ராஜேஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 6.1 தான் இருந்தது, இதனால் புதியதாக ரத்தமும் ஏற்றப்பட்டது, அவருக்கு ஹைப்பர் டென்ஷனும் இருந்துள்ளது, கோவை அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை தான் கொடுக்கப்பட்டது என்றும் கூறிய நிர்மலா, மருத்துவர்கள் வெளியே மருந்துகள் வாங்க சொன்னது பற்றி தனக்கு தெரியவில்லை என்றார்
Comments