ஒற்றை கை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத ஆட்டோ ஓட்டுனர் மீது தாக்குதல்..! உறவினர்கள் கொந்தளிப்பு!!
விபத்தில் ஒரு கை இழந்தாலும் ஒற்றை கையால் ஆட்டோ ஓடி பிழைத்து வரும் மாற்றுத்திறனாளி மீது மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் கத்திக் கூச்சலிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் . லாரி டிரைவரான இவர், சில ஆண்டுக்கு முன் விபத்தில் ஒரு கையை இழந்தார். இவருடைய மனைவி பிரிந்து வாழும் நிலையில் சில ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் சக்திவேல் தனது 2 குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் மற்றும் இளையரசனேந்தல் சாலையில் மேம்பாலம் அருகே சக்திவேல் பயணிகளை ஏற்றி, இறங்குவதற்கு பேருந்து நிலைய ஆட்டோ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு சக்திவேல் , கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஸ்சிடம் புகார் மனுவும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சக்திவேல், பஸ் நிலையத்தையொட்டிய தேவர் சிலை அருகில் நின்று கொண்டு இருந்த போது பேருந்து நிலைய ஆட்டோ டிரைவர்கள் சுடலைமணி, ராஜேஷ் உள்ளிட்டோர் வந்து தங்கள் மீது எப்படி புகார் கொடுக்கலாம் என்று கூறி சக்திவேலிடம் பிரச்னை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்ததாக கூறி சக்திவேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கும் விரட்டிச்சென்ற ஆட்டோ டிரைவர் சுடலைமணி மீண்டும் சக்திவேலை, கையை முறுக்கி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அவரது உறவினர்கள் கத்திக் கூச்சலிட்டனர்
தாக்கியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உறவினர்கள் அழுது ஒப்பாரி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற கோவில்பட்டி கிழக்கு போலீசார் , புகாருக்குள்ளான ஆட்டோ ஓட்டுனர் சுடலைமணியை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டனர்.
இந்த ஆட்டோ டிரைவர்கள் பிரச்னைகள் அனைத்தும் மேற்கு போலீஸ் நிலையப் பகுதியில் நடந்ததால் சுடலைமணி மேற்கு போலீசாரிடம் ஒப்படைப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments