கல்லூரிக்கு செல்ல லிஃப்ட் கேட்ட மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. 6 மணி நேரத்தில் இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்

0 2801
கல்லூரிக்கு செல்ல லிஃப்ட் கேட்ட மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. 6 மணி நேரத்தில் இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லூரிக்கு செல்வதற்காக ஃலிப்ட் கேட்ட மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் கரூரை சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரி செல்வதற்காக ஆண்டகளூர்கேட் பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து வராதால், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் லிஃப்ட் கேட்டதாக கூறப்படுகிறது.

மாணவியை வண்டியில் ஏற்றிக்கொண்ட இளைஞர், தனது அக்காவிற்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அவரை பார்த்து விட்டு கல்லூரிக்கு செல்லலாம் என பேச்சுக் கொடுத்துக்கொண்டே வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. சின்னக்காப்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள மலையின் மேல்பகுதியில் அக்கா வீடு உள்ளதாக அழைத்து சென்று மாணவியை அடித்து, மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், அவரிடம் இருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி கொண்டு தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் சென்றவர்களிடம் செல்போனை வாங்கி தனது அக்கா மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு மாணவி தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த போலீசார், அவரது புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இருசக்கர வாகனத்தை அடையாளமாக வைத்து தேடப்பட்ட நபரை, புதிய பேருந்து நிலையம் அருகே ரோந்து போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர் பெயர் மணிகண்டன் என்பதும், மெட்டாலா அருகே கரும்பு ஆலையில் வேலை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு மாணவி வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments