கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற உள்ளூர் வாகன ஓட்டிகள் கோரிக்கை - தினமும் வாக்குவாதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச் சாவடி நிர்வாகத்தினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோட்டாட்சியர் சாந்தி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
அப்போது, சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது திருமங்கலம் மதுரை சர்வீஸ் சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டதன் பேரிலேயே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதாகவும் இதனால் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என பதில் கூறப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து உயரதிகாரிகளை கோட்டாட்சியர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உள்ளூர் வாகன ஓட்டிகள் 350 ரூபாய் செலுத்தி மாதாந்திர பாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என உயரதிகாரிகள் கூறியதாக அவர் தெரிவித்தார். ஆனால் வாகன ஓட்டிகள் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவுற்றது.
Comments