அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.81.7 லட்சம் பறிமுதல் : அமலாக்கத்துறை

0 2557

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. தொடர்புடைய 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 81.7 லட்ச ரூபாய் இந்திய பணம் மற்றும் 13 லட்ச ரூபாய் வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. 41.9 கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி 5 இடங்களில் செம்மணல் குவாரிகளுக்கான உரிமத்தை தமது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிகளின் பெயரில் வழங்கியதாகவும், அதன் மூலம் கிடைத்த வருவாய் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பினாமி வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

இந்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க இந்தோனேசியாவில் பி.டி. எக்ஸெல் மெங்க் இந்தோ என்ற நிறுவனமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் யூனிவர்சல் பிசினஸ் வென்சர்ஸ் எஃப்.ஸி.இ என்ற நிறுவனமும் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்தோனேசிய நிறுவனத்தை 41.57 லட்ச ரூபாய்க்கு விலைக்கு வாங்கி, பின்னர் 100 கோடிக்கு விற்றதாக கணக்குக் காட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, விசாரணையை திசை திருப்பும் வகையில், தங்கள் வீட்டில் இருந்த பணம் தங்கள் குடும்பத்தால் நடத்தப்படும் மருத்துவமனை மூலம் வந்தது என்ற பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கு ஏற்ப கணக்குகளை திருத்த முயற்சி நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அமலாக்கத்துறை, தாங்கள் அதை கண்டுபிடித்து தடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

குற்றம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய பல ஆவணங்கள் சோதனையில் கிடைத்துள்ளதாகவும், அவற்றை தாங்கள் பரிசீலனை செய்து வருவதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments