நீங்கல்லாம் படிச்சி என்ன பிரயோசனம்... இப்படி ஏமாந்துட்டு நிக்கறீங்க..? 300 ஆசிரியைகளிடம் ரூ. 1.5 கோடி வசூல்
அரசு உதவி பெறும் பள்ளியில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை வழங்குவதாகக் கூறி, 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு 300 ஆசிரியைகளை வீதியில் நிறுத்தியதாக, தூத்துக்குடி நீம் அறக்கட்டளை நிறுவனரை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் நியாயம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீம் பவுண்டேசன்.... நம்மகிட்ட 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக கொடுத்து சிறப்பு பயிற்சி பெற்றுக் கொண்டால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியராக மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்று வாக்குறுதியை அள்ளிவீசி 300 ஆசிரியர்களிடம் ஒன்றரை கோடி ரூபாயை பெற்றதாக ஒப்புக் கொள்ளும் லூயிஸ் இவர்தான்..!
லூயிஸ் கடந்த ஆகஸ்ட் தொடங்கி ஒரு வருடமாக இந்த பவுண்டேசனை நடத்தி வருவதாகவும், பலருக்கு டிசம்பர் மாதம் வரை 15 ஆயிரம் ரூபாயை சம்பளமாக கொடுத்ததாகவும் அதன் பின்னர் எந்த ஒரு ஆசிரியைக்கும் சம்பளம் கொடுக்காமல் நிதிநிலை சரியில்லை என்று சாக்குப்போக்கு சொல்லி வருவதாக குற்றஞ்சாட்டிய ஆசிரியைகள் தங்கள் சம்பள பாக்கியையும், தாங்கள் கொடுத்த 50 ஆயிரம் ரூபாயையும் திருப்பிக்கேட்டு நீம் பவுண்டேசன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
முற்றுகையிட்ட ஆசிரியைகளிடம் பொறியில் சிக்கிய எலியாக சிக்கிக் கொண்ட லூயிஸையும் , அவரிடம் ஏமாந்த ஆசிரியைகளையும் ஒரு ஆசிரியையின் உறவினர் வார்த்தைகளால் விளாசி எடுத்தார்.
இதையடுத்து விளக்கம் அளித்த லூயிஸ், தங்கள் தொண்டு நிறுவனம் நிதி சிக்கலில் உள்ளதாகவும் , ஆகஸ்ட் 31 ந்தேதிக்குள் ஆசிரியைகளுக்கு பணம் திருப்பிக்கொடுக்கப்படும் என்று கூறினார்
வாக்குறுதியை பத்திரமாக எழுதி கையெழுத்துப் போட்டு தருமாறு கூறியதால் லூயிஸ் அனைத்து பத்திரங்களிலும் கையெழுத்துப் போட்டு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
Comments