இயக்குநர் இமயத்திற்கு 82ஆவது பிறந்தநாள்.! மண் வாசனை இயக்குநரின் படைப்புகள்.!
தமிழ் சினிமாவுக்கு கிராமங்களின் மண் மணத்தை அறிமுகம் செய்த இயக்குனர் பாரதிராஜா இன்று 82வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருடைய சாதனையை விளக்கும் ஒரு செய்தித் தொகுப்பை இப்போது காண்போம்.
பாரதிராஜாவுக்கு முன்பும் சினிமாவில் கிராமங்கள் இருந்தன....
கருப்பு வெள்ளைப் படங்களில் வீரம் காதல் பாசம் என்று எத்தனையோ கிராமக்கதைகள் பார்த்து விட்டோம். ஆனால் பாரதிராஜா வந்த வண்ணப்படக் காலங்களில் சூரியகாந்திகளும் செந்தூரப்பூக்களும் பூவரசம்பூக்களும் மலர்ந்து மண்ணின் மணத்தோடு இளையராஜா இசையோடு நம்மை தாலாட்டின....
கமல்ஹாசனை சப்பாணியாக்கியும் ரஜினிகாந்த்தை பரட்டையாக்கியும் படைத்த 16 வயதினிலே படம் புதிய சாதனையைப் படைத்தது.
காதலை முற்றிலும் வேறு கோணத்தில் படமாக்கியவை பாரதிராஜாவின் படங்கள். சமூகப் பொறுப்பும் கலை ஆர்வமும் மிக்க அவருடைய கதாபாத்திரங்கள் காதலில் விழுந்த போது காவியங்கள் பிறந்தன
கிராமத்து ராஜா மட்டுமல்ல நகர வாழ்க்கையும் தனக்குத் தெரியும் என்று கிரைம் படங்கள், வணிகப் படங்கள் மூலம் தன்னை நிலைநிறுத்தினார் பாரதிராஜா
பாக்யராஜ், ராதா , ரேவதி, சுகன்யா, மணிவண்ணன், கவுண்டமணி, சுதாகர், பாண்டியன், கவிஞர் வைரமுத்து என்று பாரதிராஜா அறிமுகம் செய்த நட்சத்திரங்களும் ஏராளம்...
வேலையில்லாத் திண்டாட்டம் கனவுகளின் தோல்வியைச் சொன்ன படம் நிழல்கள். அப்போதைய இளைஞர்கள் இதில் தங்களையே அடையாளம் கண்டனர்.
காதலை இசையோடு கலந்து படைத்த காதல் ஓவியம் இன்றும் ஒரு கிளாசிக்காக ஜொலிக்கிறது
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை புதிய பரிணாமத்தில் பாத்திரமாக்கி, வயதான மனிதரின், கண்ணியமான காதலை சொன்ன திரைப்படமான "முதல் மரியாதை" பாரதிராஜா படைப்புகளில் முக்கியமானது.
வயது முதிர்ந்த நிலையில் கனிந்த தமது கலையுலக அனுபவங்களுடன் சில படங்களில் நடிகராக தமது இளமைக்கால ஆசையை நிறைவேற்றி வருகிறார் பாரதிராஜா .அவர் அளித்த படங்கள் இன்றும் என்றும் நினைவில் நிற்கும்.
Comments