அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

0 5056

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலும், அவரது மகன் கௌதம சிகாமணி சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலும் சோதனை நடைபெறுதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டுச்சென்றார். அவரை விமான நிலையத்திற்கு வழி அனுப்ப அமைச்சர் பொன்முடி வீட்டில் புறப்பட்டு கொண்டிருந்தபோது அமலாக்கத்துறையினர் மத்திய ரிசர்வ் படை வீரர்களுடன் 3 வாகனங்களில் அவருடைய வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து ஆயுதப்படை போலீசார் 10 பேர் அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பொன்முடியின் சொந்த ஊரான விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பொன்முடியின் குடும்பத்தினர் நடத்தி வரும் விக்கிரவாண்டி சூர்யா கல்லூரி, கப்பியாம்புலியூர் பகுதியில் உள்ள சிகா என்ற பள்ளி மற்றும் அவர்களது கல்வி அறக்கட்டளையிலும் சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் ஒரு இடம், விழுப்புரத்தில் 4 இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் காலை முதல் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கனிமவளத் துறையை கூடுதலாக கவனித்து வந்துள்ளார். அக்காலகட்டத்தில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள், செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வில் விசாரணையில் உள்ளது. அவ்வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை புதிதாக வழக்கை பதிவு செய்து சோதனையை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல், பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கௌதம சிகாமணி மீது அமலாக்கத் துறையில் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கின் அடிப்படை சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. 2008-ஆம் ஆண்டில் கௌதம சிகாமணி விதிகளை மீறி PT Excel Megindo, Jakarta ஆகிய நிறுவனங்களின் வெளிநாட்டு பங்குகளை வாங்கியதாகவும், அதன் மூலம் சம்பாதித்த 7 கோடியே 5 லட்ச ரூபாய் வருவாயை மறைத்ததாகவும் அந்நிய செலவாணி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு சுமார் 8 கோடி மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இவ்வழக்கின் தொடர்ச்சியாகவும் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சைதாப்பேட்டையில் அமைச்சரின் காரில் சோதனை நடத்திய அதிகாரிகள், அதில் இருந்த பல்வேறு ஆவணங்களை வீட்டிற்குள் எடுத்துச்சென்று ஆய்வு செய்கின்றனர். மேலும், பொன்முடியில் வீட்டில் உள்ள ஆவணங்களில் உள்ள கையெழுத்து யாருடையது என்பதை சரிபார்க்க மத்திய தடய அறிவியல் துறை அதிகாரிகளும் அங்கு வருகை தந்தனர்.

அமைச்சர் பொன்முடி அலுவலகத்தில் உள்ள லாக்கர் ஒன்றை திறக்க முடியவில்லை என்று விழுப்புரத்தைச் சேர்ந்த சாவி தயாரிப்பவர் கூறிவிட்டதால், புதுச்சேரியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. பொன்முடி அலுவலத்தில் 2 பீரோ மற்றும் ஒரு லாக்கருக்கு சாவி இல்லை என்று அங்கிருந்தவர்கள் கூறியதை அடுத்து சாவி தயாரிக்கும் நபரான தனபால் வரவழைக்கப்பட்டார். 2 பீரோக்களுக்கான சாவியை அவர் தயாரித்துக் கொடுத்து நிலையில், லாக்கர் சாவியை தம்மால் தயாரிக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துவிட்டார். இதையடுத்து, அந்த லாக்கரை திறக்க என்ன செய்வது என்பது பற்றி அமலாக்கத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments