குழந்தைகளின் கல்விக்காக பேருந்து முன்பு விழுந்து உயிரை மாய்த்த தாய்...! தாய் உள்ளத்திற்கு ஈடில்லை
குழந்தைகளின் படிப்பு செலவிற்கு தேவைப்பட்ட பணத்தை திரட்ட முடியாததால் தனது உயிரை மாய்த்துக் கொண்டால், அதன்பிறகு குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்குமென நினைத்து சேலத்தில் பேருந்து முன் விழுந்து தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேகமாக வரும் பேருந்தின் முன்பு திடீரென குறுக்கே ஓடிச் சென்று உயிரை மாய்த்துக் கொண்ட இவர் தான் 2 பிள்ளைகளின் தாயான பாப்பாத்தி.
சேலம் முள்ளுவாடிகேட்டை சேர்ந்த 39 வயதான பாப்பாத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.
இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்று விட தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் வயதான தாயையும் பராமரித்து வந்துள்ளார் பாப்பாத்தி. குடும்பத்தின் வறுமை நிலையையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய வைராக்கியம் பாப்பாத்தியிடம் இருந்து வந்தது.
தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி,இ மூன்றாம் ஆண்டு படித்து வரும் மகளுக்கும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆர்க்கிடெக் முதலாம் ஆண்டு படித்து வரும் மகனுக்கும் கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தார் பாப்பாத்தி.
தனது மாத வருமானமோ குடும்பத்தின் அன்றாட தேவையை மட்டுமே பூர்த்தி செய்து வந்த நிலையில், கல்விக் கட்டணம் எப்படி செலுத்துவது என பாப்பாத்தி யோசனையில் ஆழ்ந்தார். இதற்காக 3 நாட்களாக வேலைக்கு கூட செல்லாமல் தெரிந்தவர்களிடம் கடன் கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
பணம் கொடுக்காததோடு, விபரீத யோசனையை பாப்பாத்திக்கு ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டால் அரசு அந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் என அந்த நபர் யோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை உண்மையென நம்பிய பாப்பாத்தி அதன்படியே, கடந்த மாதம் 28-ந் தேதி அக்ரஹாரம் பகுதியில் ஓடும் தனியார் பேருந்து முன்பு விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
விபத்தில் சிக்கி பாப்பாத்தி உயிரிழந்ததாக நினைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்த போது பாப்பாத்தி தானாகவே ஓடிச் சென்று பேருந்தின் முன்பு பாய்ந்தது தெரிய வந்ததால், கூடுதல் விசாரணையில் இறங்கினர் போலீஸார்.
அப்போது தான் தனது பிள்ளைகளின் எதிர்கால தேவைக்காக பாப்பாத்தி தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.
விபத்து வழக்கு தற்போது தற்கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீஸார், விபத்தில் சிக்கியவர்களுக்கு மட்டுமே நீதிமன்றம் மூலமாக இழப்பீடு பெற்று வழங்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
தனது இறப்பிற்கு பிறகு கிடைக்கும் நிவாரணத் தொகையாவது தனது பிள்ளைகளின் கல்வி செலவிற்கு உதவட்டும் என்று நினைத்த அந்த தாயின் உயிர் தியாகம் தற்போது அர்த்தமற்றதாக மாறி உள்ளது.
இருந்த ஒரே ஆதரவையும் இழந்து நிர்கதியாய் தவிக்கும் பிள்ளைகளுக்கு, அரசின் உதவியும், நல் உள்ளங்களின் ஆதரவுமே இப்போது தேவையாக உள்ளது.
Comments