வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்.. அமித்ஷாவுக்கு தொலைபேசியில் அழைப்பு.. பிரான்சிலிருந்து நிலவரத்தை கேட்டறிந்த பிரதமர்...!!
யமுனை வெள்ளத்தால் டெல்லி மக்கள் பெருந்துயரில் ஆழ்ந்துள்ள நிலையில், நிலவரம் குறித்து, பிரதமர் மோடி ஃபிரான்சிலிருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
தலைநகரில் கனமழை இல்லாதபோதும், ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் நீரால் டெல்லி யமுனை ஆற்றின் நீர்மட்டம், அபாய அளவை விட 3 மீட்டருக்கு மேல் உயர்ந்து நகரை வெள்ளம் சூழ்ந்தது.
டெல்லியில் உச்சநீதிமன்றம், ராஜ்காட், காஷ்மீரி கேட் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சுற்றிவளைத்த நிலையில், நீர் தேக்கப்பகுதி போல செங்கோட்டை காட்சியளிக்கிறது.
குடியிருப்புகளை மூழ்கடித்த யமுனை வெள்ளத்தில் சாலைகளில் அறைக்கலன்கள் மிதக்கும் நிலையில், கார் உள்ளிட்ட வாகனங்களும் மிதக்கின்றன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் மார்பளவு நீரில் மக்கள் நடந்து செல்வதை காணமுடிகிறது.
யமுனை நதி வெள்ளத்தில் டெல்லி பழைய ரயில்வே பாலம் முழுமையாக மூழ்கியது. நகரின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன நெரிசலில் சிக்கி தலைநகர் வாசிகள் திக்குமுக்காடி வருகின்றனர். சராய் காலே கான் உள்ளிட்ட பகுதிகளில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன.
டெல்லியில் எங்கு நோக்கினும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், ஃபிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். அடுத்த 24 மணி நேரத்தில் யமுனையில் நீர்மட்டம் குறையும் என பிரதமர் மோடியிடம் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Comments