சந்திரயான்-3..விண்ணில் செலுத்தப்பட்டது எப்படி..? 40 நாள் பயணத்தில் என்ன நடக்கும்?

0 2437

நிலவில் ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டாலும், அதன் லேண்டர் அடுத்த மாதம் 23 ஆம் தேதி, மாலை 5-45 மணிக்கு தான் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியுள்ளார்.

இருபத்தி ஐந்தரை மணி நேர கவுன்டவுன் முடிவடைந்து பிற்பகல் சரியாக 2-35 மணிக்கு சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து கொண்டு எல்.வி.எம்-3 எம்-4 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. எஸ்-200 பூஸ்டர்கள் இரண்டும் நெருப்பை உமிழ்ந்தபடி ராக்கெட்டை பூமியில் இருந்து விண்ணுக்கு உயர்த்தின.

விண்ணில் ஏவப்பட்ட 108-வது விநாடியில் பூமியின் தரைப் பரப்பில் இருந்து சுமார் 44 கிலோ மீட்டர் உயரத்தில் சென்ற போது பயில்வான் ராக்கெட்டின் எல்-110 திரவ எரிபொருள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

அதன் பின் 127-வது விநாடியில் 62 கிலோ மீட்டர் உயரத்தை தாண்டிய போது எஸ்-200 திட பூஸ்டர்கள் இரண்டும் பாகுபலி ராக்கெட்டில் இருந்து துல்லியமாக பிரிந்தன.

இதன் மூலம் வேகமெடுத்து பயணத்தை தொடர்ந்த ராக்கெட், அடுத்த 67-வது நொடியில் தரையில் இருந்து 114 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றதும், விண்கலத்தின் வெளிப்புற பாதுகாப்பு கவசம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

பயில்வான் ராக்கெட் புறப்பட்டு 6 நிமிடம் 5 விநாடி கடந்த நிலையில் எல்-110 திரவ எரிபொருள் எஞ்சின் ராக்கெட்டில் இருந்து துல்லியமாக பிரிந்தது. இந்த 3 செயல்பாடுகளின் மூலம் எல்.வி.எம் ராக்கெட் பூமியின் தரைப்பரப்பில் இருந்து 175 கிலோ மீட்டர் உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிறுத்தியது. இதுதான் முதல் கட்டம்.

அதற்கு அடுத்த 2 விநாடிகளில், சி-25 உறைகுளிர் எரிபொருள் எஞ்சினை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கினர். அதன் மூலம் ராக்கெட்டுக்கு விண்வெளியில் உந்துதல் வழங்கப்பட்டது. சுமார் 16 நிமிடங்கள் இயக்கப்பட்ட ராக்கெட் பூமியின் 174.69 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது சி-25 எஞ்சின் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.

அதன் பின் தொடர்ந்து சுமார் 5 கிலோ மீட்டர் உயரத்துக்கு 15 விநாடிகள் பயணித்த நிலையில், ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் பூமியில் இருந்து 179 புள்ளி 19 கிலோ மீட்டர் உயரத்தில் வெற்றிகரமாக பிரிந்தது.

தற்போது சந்திரயான் - 3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் விண்கலம் இருக்கும். அதுவே தொலைவில் இருக்கும்போது 36 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். இவ்வாறு சுற்றுவது தான் திட்டத்தின் இரண்டாவது கட்டம்.

அடுத்ததாக நீள்வட்டப் பாதையில் பூமிக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து, நெடுந்தொலைவுக்கு விண்கலத்தைத் தள்ளிவிட்டால்தான், நிலவின் சுற்றுப்பாதைக்கு அதைக் கொண்டுசெல்ல முடியும். அதுதான் மூன்றாவது கட்டம்.

இதை பாதை உயரம் உயர்த்து கட்டம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் விண்கலம் பயணிக்கும் சுற்றுப்பாதையின் உயரத்தை உயர்த்திக்கொண்டே போக வேண்டும். அவ்வாறு உயரத்தை உயர்த்துவதற்கு, விண்கலம் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தில், அதாவது 170 கிலோ மீட்டர் தொலைவுக்கு வந்ததும், அதன் எஞ்சினை எரித்து உந்துவிசை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை சுற்றுவட்டப் பாதையில் புவிக்கு நெருக்கமான தொலைவுக்கு வரும் போதும் உந்துவிசை கொடுத்து, சுமார் 20 நாட்களுக்கு விண்கலத்தை உயர்த்தும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர்.

பூமிக்கும் நிலவுக்கும் குறிப்பிட்ட அளவிலான ஈர்ப்புவிசை உண்டு. இரண்டுக்கும் இடையே சுமார் 62 ஆயிரத்து 630 கிலோ மீட்டர் தொலைவில் சரிசமமான ஈர்ப்பு விசைப் புள்ளி உள்ளது. அந்தப் புள்ளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தைச் செலுத்துவதான் நான்காவது கட்டம்.

சம ஈர்ப்புவிசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரி செய்துகொண்டே இருக்கவேண்டும். இதுதான் திட்டத்தின் ஐந்தாவது கட்டம்.

சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்கு சென்ற போதிலும் விண்கலம் பூமியின் ஈர்ப்புவிசைப் பிடியில்தான் இருக்கும். எனவே விண்கலம் மீண்டும் பூமியை நோக்கித் திரும்பிவிடும் வாய்ப்பு உண்டு. அதை தடுத்து, விண்கலத்துக்கு உந்துவிசை கொடுத்து தள்ளிவிட்டு நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் அனுப்புவதே திட்டத்தின் ஆறாவது கட்டம் ஆகும்.

இந்த கட்டத்தின் முடிவில் சந்திரயான் 3-ஐ நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அது விலகி விண்வெளியில் சென்றுவிடக் கூடும் என்பதால், விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையைக் சரிசெய்து நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு கொண்டு வருவது திட்டத்தின் ஏழாவது கட்டம்.

உந்துகலம், தரையிறங்கி கலம் ஆகிய இரண்டையும் அப்படியே தரையிறக்க முடியாது என்பதால், தரையிறங்கி கலத்தை பிரித்து அதிகபட்சமாக நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் முதல் குறைந்தபட்சம் 30 கிலோ மீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்த வேண்டும். இதுவே திட்டத்தின் எட்டாவது கட்டம்.

இதன் பின் நிலாவில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்குவதே திட்டத்தின் ஒன்பதாவது கட்டம். வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் இந்த கட்டத்தில் தான் திட்டத்தின் வெற்றியே அடங்கியுள்ளது. இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை இயக்கி தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும்.

கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தின் போது எட்டு கட்டங்கள் வெற்றிகரமாக எட்டப்பட்ட நிலையில், 9-வது கட்டத்தில் தரையிறங்கி கலம் மெதுவாக இறங்காமல், கீழே விழுந்து உடைந்து திட்டம் தோல்வியடைந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த பிரச்சினைகளை சரி செய்துள்ளனர். எனவே இம்முறை 9-வது கட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதன் பின் திட்டத்தின் இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்திற்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்கவேண்டும். தரையிறங்கி கலத்தின் சுற்றுச் சுவர்களில் ஒன்று திறந்ததும், அதன் வழியே உருண்டு இறங்கி ஊர்திகலம் நிலவின் தரையில் தடம் பதித்து தனது பணிகளை ஆரம்பிக்கும். இதுவே திட்டத்தின் பத்தாவது கட்டம்.

தரையிறங்கிக் கலம் அடுத்த மாதம் 23 ஆம் தேதி, மாலை 5-45 மணிக்கு தான் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

ஜூலை இறுதியில் 2-வது கட்டம் நிகழும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூன்றாவது கட்டமும் நிகழும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments