கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த தினம் இன்று

0 1521
கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த தினம் இன்று

கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கல்விக்கண் திறந்த மாபெரும் தலைவரை நினைவுகூரும் ஒரு செய்தித் தொகுப்பு....

கரம்பை மண்ணும், கரிசல் காடும், கரிச்சான் குருவிகளும் கொண்ட தென் தமிழகத்தின் அன்றைய காலத்தில் அதிகம் அறியப்படாத விருதுபட்டியில் பிறந்த காமராசர் முதலமைச்சராக வலம் வந்த போது, எண்ணற்ற திட்டங்கள் மட்டுமே அவரின் சிந்தையில் இருந்தன.

அன்றைய காலகட்டத்தில் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தால் மூடப்பட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறக்க வைத்தவர் கர்மவீரர். இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்ததால் அவர் ஆட்சி பொறுப்பேற்ற போது 5 ஆயிரத்து 303 ஆக இருந்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை, பத்தே ஆண்டுகளில் 26 ஆயிரத்து 700 ஆக உயர்ந்தது. உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சிக் கல்லூரிகள் என திரும்பி திசையெங்கும் கல்வி நிலையங்களைத் திறந்து அகவிருள் அகற்றி அறிவொளி வீச வைத்தார் காமராசர்.

நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், கல்பாக்கம் அணு மின்நிலையம், கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, சேலம் உருக்காலை, பாரத மிகு மின் நிறுவனம், ரயில் பெட்டித் தொழிற்சாலை, உதகை புகைப்படச் சுருள் தொழிற்சாலை போன்றவை தொடங்கப்பட்டன. கிண்டி, அம்பத்தூர், மதுரை, திருச்சி, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பேட்டைகள் உருவானதால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர்.

குமரி மாவட்டத்தில் மாத்தூர் தொட்டிப் பாலம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு, வீடூர் அணைகளைக் கட்டி நீரியல் மேலாண்மைக்கு வித்திட்டவர் காமராசர். நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டம், கீழ்பவானி அணை, மேட்டூர் கால்வாய் ஆகியவற்றுடன் ஆயிரத்து 600 ஏரிகளை வெட்டி தமிழகம் முழுவதும் சீரான நீர்ப்பாசனத்திற்கு வழிவகுத்தார்.

பிரதமர் பதவியை தமக்கு வேண்டாமெனத் தூக்கி எறிந்த லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திராவையும் பிரதமராக்கி கிங் மேக்கராக வலம் வந்த காமராசருக்கு வாரிசுகள் என யாரும் இல்லை. அவரது இறுதிக் காலத்தில் அவரிடம் இருந்த விலைமதிக்க முடியாத சொத்து என்றால் நான்கு கதர் வேட்டிகள், 4 கதர் சட்டைகளுமே. அதிலும் ஒன்று கிழிந்தது, இவை தவிர 350 ரூபாய் ரொக்கப்பணம் இவை மட்டுமே..!

எல்லாருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை.. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை. தன்னலமில்லாத தலைவரான காமராஜர் தொடங்கிய கல்விக் கூடங்கள், தொழிற்பேட்டைகள், நீர்ப்பாசனம், மின்உற்பத்தித் திட்டங்கள், நிலச்சீர்திருத்தம் போன்றவை அவரின் பெருமையை என்றென்றும் நீடித்து நிலைக்கச் செய்யும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments