குழந்தை ஆணா? பெண்ணா? தாயை தவிக்க விட்ட மருத்துவர் சொல்லும் விளக்கம் என்ன..? இப்படி எல்லாம் நடக்குமா..?

0 3404
குழந்தை ஆணா? பெண்ணா? தாயை தவிக்க விட்ட மருத்துவர் சொல்லும் விளக்கம் என்ன..? இப்படி எல்லாம் நடக்குமா..?

சென்னையில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால், தனக்கு பிறந்த குழந்தை ஆணா ? அல்லது பெண்ணா ? என்பது தெரியாமலேயே  நோயால் உயிரிழந்து விட்டதாகக் கூறி, பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தனது விளக்கத்தை மருத்துவத் துறையிடம் அளிக்க தயாராக இருப்பதாக தனியார் மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையின் தவறான வழிகாட்டுதலால் தனக்கு பிறந்த குழந்தை ஆணா..? பெண்ணா ? என்பது தெரியவில்லை என்றும், அந்த குழந்தையை நோய்க்கு பலிகொடுத்துவிட்டு தவிக்கும் தாய் இவர் தான்..!

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்தி துரித உணவகம் வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு வனிதா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் 2 வது முறையாக கருவுற்ற வனிதா, அருகில் உள்ள ஸ்குருத்தி என்ற தனியார் மருத்துவமனையில் தேவையான சிகிச்சைகளும், பரிசோதனைகளும், ஸ்கேன்களும் செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் தேவையான பரிசோதனைகளை சரியாகவே எடுத்துக்கொண்டதாகவும், மருத்துவர் அனிதா பரிந்துரைத்த மருந்து மாத்திரைகளை மட்டுமே உட்கொண்டு வந்ததாகவும் தெரிவித்த வனிதா, பிரசவத்திற்கு 80ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாலும், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள தனி தொகை ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாலும் கடந்த மே மாதம் 2வது வாரத்தில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு வனிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அறிவுறுத்தலின் பேரில் அறுவை சிகிச்சை மூலம் மே 10ம் தேதி குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் மருத்துவர்களிடம் வனிதா என்ன குழந்தை என கேட்க, தந்தையிடம் சொல்கிறோம் என கூறிவிட்டு சென்றனர். பின்னர், உறவினர்களிடம் தெரிவித்த போது ஆண் உறுப்பு மற்றும் பெண் உறுப்பு இரண்டும் உள்ள குழந்தையாக பிறந்ததாக தெரிவித்தனர்.

மேலும், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது எனவும், பல்வேறு இணை நோய்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். இது குறித்து பரிசோதனை செய்த போது தனியார் மருத்துவமனை எதையும் குறிப்பிடவில்லையா என வனிதா உறவினர்களிடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அதன் பின் குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு, ஒரு மாதம் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக கூறிய வனிதா, தான் பரிசோதித்த தனியார் மருத்துவமனை குழந்தை நன்றாக உள்ளது என்று தங்களை தவறாக வழி நடத்தியதால் இந்த நிலை ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி மருத்துவமனை முன்பு தனது தாயுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவல்துறையினர் வந்து மவுண்ட் துணை ஆணையரிடம் புகார் தெரிவிக்க கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். நாளை மருத்துவத் துறை அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாகவும் வனிதா கண்ணீருடன் கூறினார்.

இது குறித்து ஸ்குருத்தி மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவர் அனிதாவிடம் கேட்ட போது, தங்களிடம் 8 மாதம் வரையில் மட்டுமே வனிதா சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும், அதன் பின் எங்கு சிகிச்சை மேற்கொண்டார் என்றோ அவருக்கு பிரசவம் எங்கு நடைபெற்றது என்பதோ தனக்கு தெரியாது எனத் தெரிவித்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், இது குறித்து மருத்துவத் துறையிடம் விரிவாக பதில் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். கருவில் இருக்கும் குழந்தை ஆணா ? பெண்ணா ? என்று சொல்வது சரியல்ல என்றும் அனிதா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments