தத்தளிக்கும் தலைநகரம்.. நீர்த்தேக்கமான செங்கோட்டை.. டெல்லிக்கு துயரமான யமுனை..!
ஹரியானாவில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், யமுனை ஆற்று வெள்ளம் தலைநகரான டெல்லிக்குள் புகுந்து மக்களை தத்தளிக்க வைத்துள்ளது.
டெல்லியில் ஒரு சொட்டு மழையில்லை.. ஆனால் ஊருக்குள் புகுந்த ஆர்பரிக்கும் யமுனையின் வெள்ளத்தால் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை நீர்த்தேக்கம் போல காணப்படுகின்றது
சாலைகளில் வாகனங்கள் செல்ல இயலாமல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
டெல்லி அரசின் தலைமை செயலகம் நீச்சல் குளம் போல காட்சி அளிக்கின்றது...
டெல்லியின் அண்டை மாநிலமான அரியானாவில் அடித்து நொறுக்கிய கனமழை காரணமாக அங்குள்ள நீர்த்தேக்கங்களுக்கு அதிக அளவு நீர் வரத்து உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் முழுமையாக திறக்கப்பட்டதால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது.
பல பாலங்களை தொட்டுச்செல்லும் யமுனையின் வெள்ளம் டெல்லி வாசிகளுக்கு துயரமாக மாறி இருக்கின்றது.
யமுனை ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து குடியிருந்த பல குடும்பங்களை மீட்டு காவல்துறையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
யமுனா பஜார் பகுதியில் சொகுசு பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீரில் மூழ்கி தவித்து நிற்கின்றது.
காஷ்மீர் கேட் பகுதியில் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் படகில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்டனர்.
டெல்லி செங்கோட்டை அருகே சைக்கிள் ரிக் ஷாவை மீட்டுவர முயன்றவரை, ரிக் ஷாவுடன் வெள்ள நீர் இழுத்துச்சென்றது.
யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், நகருக்குள் நீண்ட தூரம் கனரக வாகனங்கள், செல்ல இயலாமல் கடும் போக்குவர்த்து நெரிசலில் தவித்து நிற்கின்றன.
யமுனையின் ஆக்ரோஷ வெள்ளம் தலை நகரை தத்தளிக்கவிட்டுள்ளதால், சுத்திகரிப்பு நிலையங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது, 3 நாட்கள் குடி நீர் வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Comments