நிலவில் இருந்து பூமி பற்றி ஆய்வு.! இஸ்ரோவின் புது முயற்சி.! சந்திரயான்-3 விண்கலத்துடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்விஎம்-3 ராக்கெட்

0 2162
நிலவில் இருந்து பூமி பற்றி ஆய்வு.! இஸ்ரோவின் புது முயற்சி.! சந்திரயான்-3 விண்கலத்துடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்விஎம்-3 ராக்கெட்

நிலவில் இருந்து பூமி குறித்து முழுமையான ஆராய்ச்சிக்கான சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதையொட்டி இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் 615 கோடி ரூபாயில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 'சந்திரயான் - 3' திட்டத்தில் புதிய முயற்சியாக, நிலவில் இருந்து பூமி குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வைத் தொடர்ந்து, பூமியைப் போல மனிதர்கள் வாழ்வதற்கு உகந்ததாக வேறு கோள்கள் உள்ளனவா என்ற ஆய்வு நடத்தப்பட உள்ளது.

இந்த விண்கலம் எல்விஎம்-3 என்ற ஏவுவூர்தி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பிரம்மாண்ட ராக்கெட் மூலம் இன்று விண்ணில் அனுப்பப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு, சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இருப்பத்தைந்தரை மணி நேர கவுன்ட்டவுன் நேற்று பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது

சந்திரயான்-1 விண்கலம், 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி அனுப்பப்பட்டது. சந்திரயான்-2 விண்கலம், 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி அனுப்பப்பட்டது. இம்முறை அனுப்பப்படும் சந்திரயான்-3 விண்கலம், 3 ஆயிரத்து 900 கிலோ எடை கொண்டதாகும். ஏற்கெனவே, சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், இந்த முறை விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டர், பிரக்யான் என பெயரிடப்பட்ட ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகிறது.

பயில்வான் என்றும், பாகுபலி என்றும் விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்படும், LVM-3 என்ற 143 அடி உயர ராக்கெட் மூலம், சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படுகிறது. லேண்டர், ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய சந்திரயான்-3 விண்கலம், Propulsion Module எனப்படும் உந்துவிசை கலன் மூலம், புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பின் உந்துவிசை கலனிருந்து லேண்டர் பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள், ஒரு நிலவு நாள், அதாவது பூமியின் 14 நாட்கள் சமமான காலத்திற்கு, நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்.

முந்தைய 2 திட்டங்களைக் காட்டிலும், இம்முறை அதிக எரிபொருளையும் எடுத்துச் செல்கிறது. இம்முறை நிலவின் தென் துருவ பகுதியில், தரையிறங்குவதற்கான இடத்தின் பரப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு 500 மீட்டர் நீளம், 500 மீட்டர் அகலம் என்றிருந்த நடைமுறை இம்முறை மாற்றப்பட்டு, நான்கரை கிலோ மீட்டர் நீளமும், இரண்டரை கிலோ மீட்டர் அகலமும் கொண்ட பரப்பில், தரையிறங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் - 3 திட்டத்தின் மிக முக்கிய அம்சம், இம்முறை புரெபல்ஷன் எனப்படும் உந்து இயந்திரம் அனுப்பப்படுகிறது. இது, நிலவில் லேண்டர் சாதனத்தை 'டெலிவரி' செய்ததும், அங்கிருந்து பூமியை நோக்கி நிறுத்தப்படும். இது, பூமியில் உள்ள வளங்கள், மனிதர்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும். இதன் வாயிலாக, எதிர்காலத்தில் மற்ற கோள்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான, வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய முடியும். சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப்பின் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4ஆவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments