கஞ்சா - லாட்டரி விற்பனைக்கு எதிராக தோழர்கள் மறியல்.. கொலைவெறி தாக்குதலை கண்டித்து போலீசுடன் தள்ளு முள்ளு
சேலத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தட்டிக்கேட்டதால் DYFI அமைப்பின் மாவட்ட செயலாளர் மீது நடந்த கொலை வெறி தாக்குதலை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சட்ட விரோத லாட்டரி விற்பனையை கண்டித்து போராட்டம் நடத்தியதால் தாக்கப்பட்டதாக கூறிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி இவர் தான்..! இவரை தாக்கியவர்களை கைது செய்யச்சொல்லி மறியல் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்த போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள நெசவாளர் காலனி பகுதியில் வைத்து பெரியசாமியை, வியாழக்கிழமை காலை மர்ம நபர்கள் இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு, சரக்கு வாகனத்தையும் உடைத்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் மாநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் தான் தாக்கப்பட்டதாக பெரியசாமி தெரிவித்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரியசாமியை பார்த்த கம்யூனிஸ்ட்டு இயக்க தோழர்கள் இந்த தாக்குதலை கண்டித்தும் கஞ்சா விற்பனை கும்பல் மற்றும் சட்ட விரோத லாட்டரி விற்பனை கும்பலை கைது செய்ய கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசார் கூட்டத்தில் இருந்தவர்களை ஒவ்வொரு ஆளாக பிடித்து இழுத்து வந்து காவல் வாகனத்தில் ஏற்றினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்
போலீசார் இழுத்த போது ஒருவர் மயங்கி விழுந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் இருந்து அவரை மீட்டு அழைத்துச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
Comments