டெல்லி முதலமைச்சர் இல்லத்தை சூழ்ந்த வெள்ளம்.. மக்கள் ஒருவருக்கொருவர் உதவ கெஜ்ரிவால் அறிவுறுத்தல்
டெல்லி யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி உயர்ந்து வருகிறது.
தலைநகரில் கடந்த சில தினங்களாக கனமழை இல்லாதபோதும், ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரால் டெல்லி யமுனை ஆற்றின் நீர்மட்டம், அபாயக் குறியை விட மூன்று மீட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யமுனையில் அபாய அளவைத்தாண்டி பாயும் வெள்ளத்தால், பழைய ரயில் பாலம், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ரிங் ரோடு, காஷ்மீர் கேட் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காஷ்மீர் கேட் பகுதிக்கு அருகே உள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
டெல்லியில் தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 12 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. நிகம்போத் காட் தகன மைதானத்தை தற்போதைக்கு மக்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 3 தண்ணீர் சுத்தரிகரிப்பு நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், டெல்லியில் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அவசர காலத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
Comments