ஊருக்கே பல்பு வித்த பிலிப்ஸுக்கு பல்பு கொடுத்த பரமக்குடி பாய்ஸ்.! ரூ.5 கோடி சுருட்டல்

0 10278

சென்னையில் உள்ள பிலிப்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பரமக்குடியை சேர்ந்த சாப்ட்வெர் என்ஜினீயர் ஒருவர் 5 கோடி ரூபாய் மோசடி செய்து,  தனது குடும்பத்து பெண்களுக்கு 200 சவரன் நகைகளை வாங்கிக் கொடுத்து போலீசில் சிக்கி உள்ளார்.

ஊருக்கெல்லாம் பல்பு வித்து பாப்புலரான பிலிப்ஸுக்கே பல்பு கொடுத்து 5 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட பரமக்குடி சாப்ட்வேர் என்ஜினீயர் அகஸ்டின் சிரில் இவர் தான்..!உலகின் பல்வேறு நாடுகளில் மின்னணுப் பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பிலிப்ஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது.

156 நாடுகளில் உள்ள பிலிப்ஸ் நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைக்கான தலைமை அலுவலகமான PHILIPS GBS LLP சென்னை தரமணியில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், தரமணியில் உள்ள PHILIPS GBS LLP நிறுவனத்தின் மேலாளரான ரமேஷ் சொக்கலிங்கம் என்பவர் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார்.

அப்புகாரில் தங்களது நிறுவனம் Accounting மற்றும் IT சம்மந்தமான துறைகளில் ஈடுபட்டு வருவதாகவும், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைத்து நடவடிக்கைகளுக்கும் SAP என்னும் Software Tool பயன்படுத்தி வருவதாகவும், இந்த SAP Tool மூலமாக தான் உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், பணபரிமாற்றம் கண்காணிக்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தங்களது நிறுவனத்தில் Senior Accounting Specialist ஆக பணியில் சேர்ந்த அகஸ்டின் சிரில் என்பவரும் , அவரது நண்பரான ராபின் கிறிஸ்டோபர் என்பவரும் சேர்ந்து 5 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதாகவும் அவர்களை கைது செய்து பணத்தை மீட்டுத் தரக்கோரியும் அப்புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அகஸ்டின் சிரில் மற்றும் அவரது நண்பரான ராபின் கிறிஸ்டோபர் ஆகிய இருவரும் சேர்ந்து ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் உள்ள பிலிப்ஸ் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டிய தொகை என போலியான ரசீதுகளை தயாரித்து, அந்நாட்டில் உள்ள தங்களுக்கு தெரிந்தவர்களின் வங்கிக் கணக்கு மூலம் வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்பி பின் தங்களது அக்கவுண்டுக்கு பணத்தை மாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் குற்றவாளிகளின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள பூர்வீக வீட்டிலும், அவர்களது நெருங்கிய உறவினர் வீட்டிலும் நீதிமன்ற உத்தரவுப்படி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் அகஸ்டின் சிரில், ராபின் கிறிஸ்டோபர் தங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 215 சவரன் தங்கநகைகள், 6 லட்சம் ரூபாய் ரொக்கபணம், கார், இரு சக்கர வாகனம், லேப்டாப், மொபைல் போன்கள் மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அகஸ்டின் சிரிலும், கிறிஸ்டோபரும் மோசடிப்பணத்தில் தங்கள் வீட்டு பெண்களுக்கு ஏராளமான நகைகளை வாங்கிக் கொடுத்திருப்பதாக போலீசார், தெரிவித்தனர்

இதனையடுத்து செல்போன் சிக்னல் மூலமாக பரமக்குடியில் தலைமறைவாக இருந்த ராபின் கிறிஸ்டோபர் மற்றும் சென்னை அண்ணா நகரில் தலைமறைவாக இருந்த அகஸ்டின் சிரில் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டில் நிறுவனத்தில் Senior Accounting Specialist ஆக பணியில் சேர்ந்த அகஸ்டின் சிரில் என்பவர், பணத்தாசை காரணமாக அவருடைய SAP Account-ன் User ID யை முறைகேடாக பயன்படுத்தி ஸ்பெயினில் இருக்கும் அவரது சித்தப்பா மற்றும் பெல்ஜியம் பகுதியில் இருக்கும் தனது நண்பர்கள் கணக்கிற்கு சர்வதேச கேட்-வே மூலம் பணம் அனுப்பி அங்கிருந்து தமிழ்நாட்டில் உள்ள தனது மாமனார், மாமியார், மச்சான் மற்றும் நண்பர்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப சொல்லி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த மோசடிக்கு அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நண்பர் ராபின் கிறிஸ்டோபர் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

உலகத்தின் 156 நாடுகளில் உள்ள பிலிப்ஸ் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை தலைமை அலுவலகமாக சென்னை தரமணி அலுவலகம் இயங்குவதால், நாளொன்றுக்கு பல நூறு கோடிகள் இங்கிருந்து பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் சிறுக சிறுக மோசடி செய்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இத்தகைய மோசடியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் நினைத்தது போல மோசடி நடந்ததை தரமணி அலுவலகத்தில் யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதும் வெளிநாட்டிலிலுள்ள அலுவலகத்தில் பணப்பரிவர்த்தனை சரிபார்ப்பின் போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலமாக சென்னை அலுவலகத்துக்கு தெரியவந்தது என மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

மீதமுள்ள பணத்தை கைப்பற்றும் முயற்சியில் போலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments