முதல்நாள் நீல சட்டை...! மறுநாள் பச்சை சட்டை...!! நடிகர் விஜய் நடத்திய 2 நாள் ஆலோசனை..!
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் 2-ஆவது நாளாக ஆலோசனை நடத்தினார். வரும் 15ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை அமைக்க விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் முதல்கட்டமாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை செவ்வாயன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார் நடிகர் விஜய். தொகுதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர் கேட்டறிந்ததாக தெரிகிறது.
2ஆவது நாள் ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து நடிகர் விஜய் இனோவா காரில் புறப்பட்டு பனையூர் சென்றார். அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் அவருடன் இருசக்கர வாகனங்கள் உடன் சென்றனர்.
பச்சை நிற சட்டை அணிந்து அலுவலகத்துக்கு வந்த விஜயைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
பனையூர் அலுவலகத்தில் 10 மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை மாலை 5 மணி வரை நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமைனறு எஞ்சிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் 3-வது நாளாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
பனையூர் நோக்கி செவ்வாயன்று நடிகர் விஜய் சென்ற கார் அக்கரை பகுதியிலுள்ள சிக்னலை மீறியதாக புகார் எழுந்தது. இதன்பேரில் போக்குவரத்து போலீசார் விதித்த 500 ரூபாய் அபராதத்தை நடிகர் விஜய் செலுத்தினார்.இதனை அடுத்து 2ஆவது நாள் கூட்டத்திற்கு பின், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் வரை சிக்னலில் பொறுமையாகக் காத்திருந்து விஜயின் கார் கடந்து சென்றது.
இதனிடையே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், வருகிற 15ஆம் தேதி முதல், இலவச இரவு பாட சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தொடங்கப்படும் பாட சாலை திட்டத்திற்கான இடம் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்து தரப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments