சைரனோடு ஆம்புலன்ஸில் வந்து சாவகாசமாக டீ, பஜ்ஜி சாப்பிட்டவர்களுக்கு அபராதம்..! என்ன கொடுமை சார் இது....?
சைரனை ஒலிக்க விட்டுக் கொண்டு வேகமாக வந்த ஆம்புலன்ஸ்சிற்காக சாலை போக்குவரத்தை போலீஸார் அவசர அவசரமாக சரி செய்து வழி ஏற்படுத்திக் கொடுக்க, ஆம்புலன்சில் இருந்தவர்களோ சிக்னல் அருகே உள்ள சாலையோர கடை ஒன்றில் நிறுத்தி சாவகாசமாக டீ, பஜ்ஜி சாப்பிட்டனர்.
ஹைதராபாத்தில் பரபரப்பான பஷீர் பாக் பகுதியில் சைரன் ஒலியோடு வேகமாக வந்துக் கொண்டிருந்தது தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று.
போக்குவரத்து நெரிசலை சரி செய்து ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார் இங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர். சிக்னலில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற ஆம்புலன்ஸ், திடீரென ஓரம் கட்டி சாலையோரமாக இருந்த கடை முன்பு சைரன் ஒலியோடு நிறுத்தப்பட்டது.
என்னவென்று விசாரிப்பதற்காக போக்குவரத்து காவலர் சென்ற போது, ஆம்புலன்ஸ்சில் இருந்து சாவகாசமாக இறங்கியவர்கள், சூடாக பஜ்ஜியும் டீயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ்சின் முன் இருக்கையில் இருந்த பெண் ஊழியருக்கு கூல்டிரிங்ஸ் வாங்கி வந்துக் கொண்டிருந்தார் ஓட்டுநர்.
அதிர்ச்சியடைந்த போக்குவரத்து காவலர், சைரன் ஒலியோடு வந்ததால் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி கொடுத்தேன், நீ என்ன என்றால் டீ, பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாயே.. என்று கேள்வி கேட்டார்.
அதற்கு, நோயாளியும், டாக்டரும் டீ கேட்டதால் அவர்களுக்காக ஆம்புலன்ஸ்சை நிறுத்தியிருப்பதாக தெரிவித்தார் ஓட்டுநர். இந்த பதிலால் எரிச்சலடைந்த காவலர், நடந்த அனைத்தையும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்புலன்ஸ்சில் நோயாளி யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. டிராபிக்கில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக சைரனை ஒலிக்க விட்டு வந்ததும் தெரிய வந்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உயிர்காக்கும் அவசரத்தில் ஆம்புலன்ஸ் செல்கிறது என்பதற்காக தானாகவே முன்வந்து மக்களே வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையில் இதுபோன்ற செயல் ஏற்புடையதல்ல என போலீஸார் தெரிவித்தனர்.
Comments