தாழ்த்தப்பட்ட மாணவர்களின் காலணிகளை எரித்ததாக சர்ச்சை...வதந்தி பரப்புவதாக ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி விளக்கம்..!!
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் காலணிகளை ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் எரித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், தன் மீது வேண்டுமென்றே வதந்திகள் பரப்பப்படுவதாக டி.எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் முறையற்ற சிகை அலங்காரத்துடன் வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுவது தொடர்பாக ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி கணேஷ்குமார் அவ்வப்போது நேரில் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் டி.எஸ்.பி நேற்று பள்ளிக்கு வந்த போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலரின் காலணிகள் ஸ்டைலாக இருந்ததாக கூறி, அந்த காலணிகளை கழற்ற வைத்து குப்பையில் போட்டு எரித்ததாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது பற்றி டி.எஸ்.பியிடம் கேட்ட போது, தனது காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் அவர்களுக்கு சாதகமாக தான் செயல்படாததால் அவர்கள் மாணவர்களை வைத்து தன் மீது வதந்திகள் பரப்புவதாகவும் தெரிவித்தார்.
அதே பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன், ஸ்டைலாக இருக்கும் காலணிகளை டி.எஸ்.பி கழற்ற மட்டுமே சொன்னதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் தான் அவற்றை எரித்ததாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments