ரூ.12 லட்சம் லஞ்சம் பெண் காவல் ஆய்வாளர் வசமாக சிக்கியது எப்படி ? வசூல் ராணிகளை மிரளவிட்ட சம்பவம்
கருக்கலைப்பு செய்த பெண் மருத்துவர்களை மிரட்டி 12 லட்சம் ரூபாய் பணம் பறித்த புகாருக்குள்ளான கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். வசூல் ராணிகளை மிரளவிட்டு லட்சங்களை லஞ்சமாக கறந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரை கடந்த 10தினங்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா, போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, சிங்கபெருமாள் கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை மருத்துவர் பராசக்தி அந்த சிறுமிக்கு இரண்டு முறை கருக்கலைப்பு செய்திருப்பதையும், மறைமலைநகரில் செயல்பட்டு வரும் மற்றொரு தனியார் மருத்துவமனை மருத்துவர் உமாமஹேஸ்வரி இரண்டு முறை கருக்கலைப்பு செய்திருப்பதாகவும் சிறுமியின் தாய் , காவல் ஆய்வாளர் மகிதாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் மகிதா, மருத்துவர் பராசக்தியிடம் சென்று , நீங்கள் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த குற்றத்தின்படி உங்கள் மீது நடவடிக்கை எடுத்து மெடிக்கல் கவுன்சில் வரை சென்றால் உங்களது மருத்துவமனைக்கு சீல்வைக்கும் நிலை உருவாகும் என மிரட்டியதோடு, அப்படி செய்யாமல் இருக்க மிரட்டி 10லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. மறைமலைநகர் மருத்துவர் உமாமகேஸ்வரியை மிரட்டி 2லட்சத்து50ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக காவல் ஆய்வாளர் மகிதா மீது தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பல்வேறு சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகள், குரல்பதிவுகளின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மகிதா இரு மருத்துவர்களையும் மிரட்டி 12 லட்சத்து50ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது உறுதியானதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் மகிதாவை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
ஏற்கனவே கடந்த இரண்டு மாதம் முன்பு இதே காவல்நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் இரண்டு பெண் காவலர்கள் உள்ளிட்ட மூவர் டீக்கடையில் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க மறுத்து மிரட்டிய வீடியோ வெளியானதன் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments