கழிவறை - தண்ணீர் இல்லா சென்னை மாநகராட்சி பள்ளி தவிக்கும் ஏழை மாணவர்கள்..!

0 1982

சென்னை புழல் காவாங்கரையில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு உயர் நிலைபள்ளியில் இருக்க பெஞ்சு,  குடிக்க தண்ணீர், விளையாட திடல் மற்றும் கழிவறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்

சாலையே விளையாட்டுத்திடல்....தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை..

அவசரம் என்றால் இருப்பது ஒரே ஒரு கழிவறை... அமர்ந்து படிப்பதற்கு போதிய வகுப்பறைகளோ, பெஞ்சுகளோ இல்லை... அதனால் தான் பல் நோக்கு கட்டிடத்தில் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்துள்ளனர் இந்த மாணவர்கள்...

பெரு நகர சென்னை மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியின் பரிதாப நிலை தான் இது...!

சென்னை புழல் காவாங்கரை கண்ணப்பர் சாமி நகரில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் உரிய வகுப்பறைகளும் இல்லாததால், குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள எந்த பயிற்சி வகுப்பும் இல்லை என்று ஆதங்கப்படும் பெற்றோர் இங்கு மாணவர்கள் தரையில் அமர்ந்து பயின்று வருகிறார்கள், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தரையில் அமர்ந்து இருப்பதால் குழந்தைகளுக்கு முதுகுவலி மற்றும் கால்வலி ஏற்படுகிறது இதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை என்று புகார் தெரிவித்தனர்

தமிழ்நாடு அரசு இலவசகல்வி, பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், சத்துணவு, சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கினாலும் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தரமாக இல்லாததாலும், அருகில் மயானம் இருப்பதலும் மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுவதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

800 மாணவர்கள் படிக்கின்ற இந்த பள்ளிக்கு ஒரே ஒரு கழிவறை தான் என்று சொல்லும் மாணவ மாணவிகள் அவசரத்துக்கு செல்ல இயலாமல் அடக்கி வைத்துக் கொண்டு உடல் உபாதைகளுக்கு ஆவதாக வேதனை தெரிவிக்கின்றனர்

இதனை கண்காணித்து பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கோ, விளையாட்டுத்திடல் அமைப்பதற்கோ, மாணவர்களுக்கு கூடுதல் கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கவோ மாநகராட்சியின் கல்விக்குழுவோ, கவுன்சிலரோ, முன்வரவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். இந்த இட நெருக்கடி காரணமாக தாங்கள் இந்த தெருவையே பயன்படுத்த இயலவில்லை என்கின்றார் அந்தபகுதி குடியிருப்பு வாசிகள்

விளையாட்டு திடல் இல்லையென்றால் தனியார் பள்ளிகளுக்கு , பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்குவதில்லை என்ற சூழலில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் உயர் நிலை பள்ளியை மாநகராட்சி எப்படி நடத்தி வருகின்றது ? என்பதே இந்த பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகளின் கேள்வியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments