தினத்தந்தி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..! வேல்முருகன் கட்சியினர் அட்டூழியம்..!
கடலூரில் உள்ள தினத்தந்தி நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வழக்கறிஞர் ராஜி உள்ளிட்ட இருவர் வெடிபொருள் வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏவுமான வேல்முருகன் மீது 20 ஆண்டுகள் அவருடன் வசித்த மனைவி காயத்திரி, தனக்கு ஜீவனாம்சம் தரவில்லை, தனது வளசரவாக்கம் வீட்டை அபகரித்துக் கொண்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்த வேல்முருகன், சங்கி கும்பல்கள் தனது துணைவியாரை தனக்கு எதிராக பேச வைத்திருப்பதாகவும், தன் மீது அவதூறு பரப்ப நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்திருந்தார்
இதற்கிடையே வேல்முருகனின் மனைவி காயத்திரியின் பேட்டியை ஒளிபரப்பிய செய்தி நிறுவனங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் தொலைபேசி வாயிலாக அழைத்து தொடர்ந்து மிரட்டி வந்தனர். குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின்அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளரும், வழக்கறிஞருமான நத்தம் ராஜி என்பவர் செய்தி நிறுவனத்தை அடித்து நொறுக்குவோம் என்று மிரட்டல் விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக சம்பவத்தன்று நள்ளிரவில் கடலூரில் உள்ள தினத்தந்தி நாளிதழ் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். வெள்ளை நிற கார் மற்றும் பைக்கில் வந்தவர்கள் பெட்ரோல் குண்டு வீசிச்சென்றது தெரியவந்தது. அந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விசாரணையை முன்னெடுத்த போலீசார், தினத்தந்தி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்கறிஞர் நத்தம் ராஜியையும் அவரது கூட்டாளி வாசுதேவனையும் கைது செய்தனர். தப்பி ஓடிய குமார் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடந்த 8ந்தேதி நள்ளிரவு கூட்டாளிகளுடன் மது அருந்திய ராஜி, செய்தி நிறுவனங்களை தொடர்பு கொண்டு காயத்திரியின் பேட்டிகளை நீக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக செய்தி நிறுவனங்களை தாக்கும் திட்டத்தை வகுத்து, கூட்டாளிகளான வாசுதேவன், குமார் ஆகியோருடன் வெள்ளை நிற கார் ஒன்றை இரவல் வாங்கிக் கொண்டு, நள்ளிரவு 2 மணி அளவில் தினத்தந்தி அலுவலகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த குண்டு வாசலில் விழுந்து உடைந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை
எதற்காக தினத்தந்தி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசினீர்கள் ? என்று போலீசார் கேட்ட போது, போதையில் பாலிமர் டிவி ஆபீஸ் என்று நினைத்து தினத்தந்தி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக குடிகார ராஜி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்
Comments