முதலமைச்சரின் கடிதம் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை.. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆளுநரை சீண்டிப் பார்க்கின்றனர் - அண்ணாமலை
குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் தமிழகத்தின் உண்மையான நிலையை பிரதிபலிக்கும் விதமாக இல்லை என்று பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள எவ்வளவோ பிரச்சனைகளையும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிறைய வாக்குறுதிகளையும் விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்ப்பதாக கூறினார். தமது கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க ஆளுநர் மீது குற்றசாட்டுகளை கூறுவதை எந்த வகையில் ஏற்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் எடுக்க முடிவு தவறு என்று சொல்லும் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று அப்போதைய ஆளுநரிடம் வலியுறுத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரின் மாண்புக்கு உரிய வகையில் அவரை பேசுவதே இல்லை என்று அவர் குறிப்பிட்டார். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்ற போதிலும், கலாச்சாரத்தைப் பற்றி, பண்பாட்டை பற்றி பேச ஆளுநருக்கு உரிமை இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
Comments