ஒரு கட்சித் தலைவர் செய்யும் செயலா இது..? ஊடகங்களை மிரட்டும் த.வா.க வேல்முருகன்..!

0 4442

ஜீவனாம்சம் வழங்கவில்லை என்ற முன்னாள் மனைவியின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிப்பதை தவிர்த்து வரும்  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சமூக வலைதளங்களில் உள்ள அவரது முன்னாள் மனைவி கொடுத்த பேட்டி தொடர்பான செய்திகளை நீக்குமாறு தனக்கு நெருக்கமானவர்களை ஏவி பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு தொலைபேசியில் இடைவிடாமல் மிரட்டல் விடுத்து வருகின்றார்.

பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏவான வேல்முருகன் மீது அவரது முன்னாள் மனைவி காயத்திரி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார். காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி, தனக்கு திருமணம் நடந்து 20 வருடங்கள் வேல்முருகனுடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும் , குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம், தத்துக் குழந்தையும் வேண்டாம் என்று வேல்முருகன் கூறியதால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதாகவும் கூறியிருந்தார். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு தரவேண்டிய மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சத்தை கூட வேல்முருகன் தரமறுப்பதாக முன்னாள் மனைவி காயத்ரி குற்றஞ்சாட்டியிருந்தார்

காயத்திரி தொடர்ந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு , காஞ்சிபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்த வேல்முருகனிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்க சென்றனர். வேல்முருகன் உள்ளே இருந்து கொண்டே, தனது ஓட்டுனர் மற்றும் நேர்முக உதவியாளர் மூலம், உங்கள் குடும்பங்களில் பிரச்சனை இல்லையா ? என்று கூறி செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தார்.

சிறிது நேரத்தில் கட்சிக் கொடி கழற்றப்பட்ட காரில் ஏறி வேல்முருகன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். வேல்முருகனின் செல்போன் எண்களான 83000-43330 மற்றும் 87789-75909 ஆகியவற்றுக்கு தொடர்பு கொண்டு முன்னாள் மனைவி காயத்திரியின் பேட்டி தொடர்பாக விளக்கம் கேட்க பல முறை முயற்சி செய்தபோதும் செல்போன் அழைப்பை அவர் எடுக்கவில்லை.

இந்த நிலையில் அவரது முன்னாள் மனைவி காயத்திரியின் பேட்டியை ஒளிப்பரப்பிய செய்தி நிறுவனங்களை, வேல்முருகன் தனக்கு நெருக்கமானவர்களை ஏவி மிரட்டி வருகிறார். 7 ந்தேதி காயத்திரியின் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் மறுநாள் 8 ந்தேதி வரை யாரும் தொடர்பு கொள்ளாத நிலையில், இரவு 8 மணிக்கு மேல், வேல்முருகனுக்கு தெரிந்த சிலர், வேல்முருகனைப் பற்றி எப்படி செய்தி போடலாம் என்று கேட்டும், சமூக வலைதளங்களில் உள்ள வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்திரி பேட்டி அளித்த செய்திகளை நீக்குமாறும் இல்லாவிட்டால் அலுவலகத்தை அடித்து நொறுக்குவோம் என்றும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

வேல்முருகனின் மிரட்டல் குறித்து அவரது ஆட்கள் தொடர்பு கொண்ட எண்களின் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேல்முருகன் விளக்கம் அளித்தால் அதனை ஒளிபரப்ப ஊடகங்கள் தயாராக இருக்கும் நிலையில், அதை விடுத்து திரைமறைவில் இருந்து கொண்டு தனது ஆட்களை ஏவி அவர் மிரட்டல் விடுத்து வருகிறார். அதே நேரத்தில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேல்முருகன் மறுப்பதாக அவரது முன்னாள் மனைவி கூறி இருப்பது பற்றி வேல்முருகனின் விளக்கம் என்ன என்பதை எதிர்பார்த்து அவரது கட்சியினர் காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments